×

வறட்சியில் வாடும் மாவட்டம் வைகை, பெரியாறில் பங்கு நீர் வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

சிவகங்கை, ஆக.14: சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கு வைகை மற்றும் பெரியாறு கால்வாயில் இருந்து இதுவரை நீர் திறக்கப்படாததால் விவசாயப்பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. எனவே உடனே தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கை, திருப்புவனம் தாலுகாவில் பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் சுமார் 143 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்கள் மூலம் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒருபோக பாசன வசதி பெறுகின்றன. பெரியாறு பாசன பகுதி மேலூர் பிரிவின் கீழ் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக மேலூர் பிரிவில் ஒரு போக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டும், சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் தற்போது பெரியாறு கால்வாயில் நீர் திறக்கப்பட்டு மதுரை மாவட்டம் வரை நீர் வருகிறது. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் திறக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு பெரியாறு கால்வாயில் நீர் திறக்கப்பட்டு மதுரை மாவட்ட எல்கையான குறிச்சி வரை வந்துள்ளது. ஆனால் அடுத்த கிராமமான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கள்ளராதினிப்பட்டி கண்மாய்க்கு நீர் திறக்கவில்லை. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், கலெக்டர் ஆகியோரிடம் விவசாயிகள் கோரிக்கைவிடுத்தும் பயனில்லை. வைகை ஆற்றில் வரும் நீரின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். விரகனூர் மதகு அணையில் திறந்துவிடப்படும் நீர் மானாமதுரை முகப்பு வழியே கீழப்பசலை கால்வாய் வரை வரும். ஆனால் ஆண்டுதோறும் முறைப்படி சிவகங்கை மாவட்டத்திற்கான குடிநீர், விவசாயத்திற்கான நீர் திறப்பதில்லை. இதனால் வைகை பாசனம் மூலம் பயன்பெறும் விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே தற்போது வைகை மற்றும் பெறியாறு கால்வாய் பகுதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதை பயன்படுத்தி சிவகங்கை மாவட்டத்திற்கான நீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...