×

ஊராட்சி சாலை இணைப்பு பணிக்கு கண்மாயில் முறைகேடாக மண் அள்ளியதாக புகார்

மதுரை, ஆக. 14: ஊராட்சி பகுதியில் சாலை இணைப்பு பணிக்கு முறைகேடாக கண்மாய் மண்ணை பயன்படுத்துவதாக அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டது. மதுரை மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த மணிகண்டன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளனிடம் கொடுத்த புகார் மனுவில், ‘மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் மற்றும் ஒன்றிய இணைப்பு சாலைகள் கடந்த 2 ஆண்டுகளாக போடப்பட்டு வருகிறது. இந்த சாலைப் பணிகள் பொதுமக்களை கொண்டே பணிகள் மேற்கொள்ள வேண்டும். எவ்வித இயந்திரங்களை பயன்படுத்த கூடாது என பொது விதி உள்ளது. ஆனால் விதியை மீறி சாலை போடப்படுகிறது. வீரபாண்டி ஊராட்சி, சத்திரப்பட்டி ஊராட்சி, வெளிச்சநத்தம், மஞ்சம்பட்டி, ஆலாத்தூர், பூதகுடி, கொடிமங்கலம் மற்றும் கருவனூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் இந்த இணைப்பு சாலை பணிகள் ரூ.6 கோடி செலவில் நடந்து வருகிறது. இந்த பணிக்கு, தேவையான மண் பூதகுடி, கீழப்பணங்காடி, இரணியம், இலுப்பகுடி, கண்ணிக்குளம், மாரணவாரியேந்தல், கூலப்பாண்டி, வீரபாண்டி, ஆலத்தூர், ஐயர்பங்களா உள்ளிட்ட கண்மாய்களில் விவசாயத்திற்கு மண் எடுப்பது போல் பொய்யாக கணக்கு காண்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால், அரசிற்கு பெரும் இழப்பு ஏற்படுத்தி, கண்மாய்களில் மண்ணை ஊரக சாலை பணிகளுக்கு அரசு அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஊரக இணைப்பு சாலை திட்டத்திற்கு இருபுறமும் உள்ள மண்ணை வெட்டி சாலைகளை உயர்த்தி அமைக்க வேண்டும் என்பது அரசின் விதி. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக அரசு அதிகாரிகள் விவசாயிகளின் பெயரில், போலியாக ஆவணம் தயாரித்து கண்மாய் மண்ணை சாலைகளுக்கு பயன்படுத்தி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். கண்மாய் மண்ணை சட்டவிரோதமாக எடுத்ததற்காக மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களால்  அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகையை அதிகாரிகளிடமிருந்து வசூல் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாவட்ட ஊராட்சி இயக்குநர் விசாரிக்க டிஆர்ஓ பரிந்துரை செய்தார்.

Tags :
× RELATED அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்