×

வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் சரமாரி வெட்டி படுகொலை: டிரைவரிடம் விசாரணை

பொன்னேரி, ஆக.14: மீஞ்சூர் அருகே வடசென்னை அனல் மின்நிலைய ஒப்பந்த தாரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின்நிலையம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், கப்பல் கட்டும் தளம் ஆகிய நிறுவனங்களில் ஒப்பந்ததாரராக இருந்தவர் ஜேம்ஸ்பால் (45). இவர் எண்ணூர் பர்மாநகர் 2வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு ஜான்சி (40) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஜேம்ஸ்பாலுக்கு தொழில் ரீதியாக பலருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரவுடிகள் சிலர், ஜேம்ஸ்பாலை பணம் கேட்டு மிரட்டினர்.  அப்போது பணம் தர மறுத்த அவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் பணம் கேட்டு ரவுடிகள் ஜேம்ஸ்பாலை மிரட்டினர். அப்போதும் பணம் கொடுக்க மறுத்த ேஜம்ஸ்பாலுக்கு ரவுடிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த நிலையில் ஜேம்ஸ்பால் நேற்று காலை வடசென்னை அனல்மின் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணியை ஆய்வு செய்ய வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். அவருடன் நண்பர்கள் 4 பேர் வந்துள்ளனர். காரை டிரைவர் ஓட்டினார். இவர்கள் பயணித்த கார் எண்ணூர் - வல்லூர் செல்லும் சாலையில் வடசென்னை அனல்மின் நிலையம் எதிரே வந்தது. அப்போது மற்றொரு காரில் வேகமாக வந்த ஒரு கும்பல், ஜேம்ஸ் பால் வந்த காரை இடித்து தள்ளுவதுபோன்று வழிமறித்து நின்றது. உடனே, டிரைவர் பிரேக் அடித்து காரை நிறுத்தினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஒரு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் மற்றும் காரில் இருந்தவர்கள்  கத்தி, அரிவாள், பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கி வந்தனர். மின்னல் வேகத்தில் காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.  ஜேம்ஸ்பாலை சரமாரியாக வெட்டினர்.

இதை தடுக்க முயன்ற அவரது நண்பர்கள் ராஜேந்திரன், மதன் ஆகியோருக்கு காலில் வெட்டு விழுந்தது. மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் உடலில் பல இடங்களில் வெட்டுகாயமடைந்த ஜேம்ஸ்பால், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த அந்த மர்மகும்பல், தாங்கள் வந்த வாகனங்களில் ஏறி தப்பியது. தகவல் அறிந்து பொன்னேரி டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் ராஜா குமார், பால்ராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். படுகாயம் அடைந்த ராஜேந்திரன், மதனை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், ஜேம்ஸ்பால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.பொன்னி சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜேம்ஸ்பால் வந்த காரின் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். வடசென்னை பகுதியில் பிரபல தொழில் அதிபராக வலம் வந்த ஜேம்ஸ்பால் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...