×

ஆளுங்கட்சியினர் சிபாரிசால் 1644 அங்கன்வாடி பணியாளர்கள் நியமிப்பதில் ஓராண்டாக இழுபறி

மதுரை, ஆக. 13:  மதுரை மாவட்டத்தில் 1,644 அங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமிப்பதில் ஆளுங்கட்சியினர் சிபாரிசால் கடந்த ஒராண்டாக இழுபறி நிலை நீடிக்கிறது.   மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் திட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் 820 முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், 94 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 730 அங்கன்வாடி உதவியாளர்கள் என மொத்தம் 1,644 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படுவார்கள் என கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான மாதிரி விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பதாரர்கள் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்தனர். இதன்படி மொத்தம் சுமார் 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான சான்றிதழ் சரி பார்ப்புபணி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் நடந்தது.

கலெக்டரின் நேர்முக உதவியாளர், அங்கன்வாடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சமூகபாதுகாப்பு திட்ட அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் தலைமையில் 10 குழுக்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மேற்கொண்டனர். தேர்வுக்கான அனைத்து பணியும் முடிந்தது. இதில் ஆளுங்கட்சியினர் தங்களது ஆதரவாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யக் கோரி பட்டியலை கொடுத்தனர். ஓரே பணியிடத்துக்கு மாவட்டம், எம்எல்ஏக்கள் என சிபாரிசு செய்ததால், யாருடைய சிபாரிசுக்கு பணியிடம் ஒதுக்குவது என அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதனால் பணியிடத்திற்கான தேர்வை அதிகாரிகள் ஒராண்டாக நிறுத்தி வைத்தனர். இந்த பணி தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.  

மாவட்டத்தில் தற்போது வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியிடம் இன்னும் காலியாக உள்ளது. அங்கன்வாடி பணியாளர்கள் கடந்த மாதம் இதுதொடர்பாக போராட்டம் நடத்தி மனுவும் கொடுத்தனர். ஆனால் இன்னும் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை.  இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த பெண்கள் பலர் முடிவை தெரிந்து கொள்ளவும், வேலைகேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து வந்து செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி