×

திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தஞ்சை, ஆக. 9:  திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் கட்சியினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.திமுக தலைவர் கருணாநிதி உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை காலாமானார். இதனால் மாவட்டம் முழுவதும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி மறைவையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடியது. தஞ்சை மாநகர பகுதியில் உள்ள தெற்கலங்கம், கீழவீதி, தெற்கு வீதி, கீழவாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தஞ்சை பழைய, புதிய பேருந்து நிலையங்கள்,  ரயில்  நிலையங்கள், முக்கிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.  பேருந்துகள்,  ஆட்டோக்கள், வேன்கள் இயங்கவில்லை. மேலும் ஒவ்வொரு வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. திமுகவினர் அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் கருப்பு சட்டை அணிந்தும், கருப்புக்கொடியும் குத்தியிருந்தனர். மேலும் ஒவ்வொரு தெருக்களிலும் கருணாநிதி உருவப்படத்தை வைத்து திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில்  உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. நகர பஸ்ஸ்டாண்ட் பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது. ஆட்டோக்கள் இயங்கவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும்  மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. ஆட்டோ, கார், வேன்கள் இயங்கவில்லை. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தன. இதபோல் பேராவூரணி பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மாவட்டம் முழுவதும் அனைத்து கட்சியினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் கருணாநிதி உருவப்படத்துக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். தாராசுரம், தாராசுரம் கடைவீதி, கும்பகோணம் புதிய பஸ்ஸ்டாண்ட், கும்பகோணம் கடைவீதி, பேட்டை தெரு, எம்எல்ஏ அலுவலகம், சுவாமிமலை, நகராட்சி அலுவலகம், அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகம், சாக்கோட்டை, உள்ளூர், கருப்பூர் என்று கும்பகோணம் பகுதி முழுவதும் திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அப்பகுதியில் டிவிகளை வைத்து திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியை பார்த்தனர். கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் கவிதாராம் மோகன்ராஜ் தலைமையில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


Tags :
× RELATED நாளை தஞ்சாவூரில் நான் முதல்வன் திட்ட...