×

தமிழகம் முழுவதும் சுங்க கட்டண உயர்வை கண்டித்து 55 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்: மாநில தலைவர் பரபரப்பு பேட்டி

சேலம்: தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து, 55 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த அடிப்படையில் கட்டணம் வசூலிக்க தனியார் நிறுவனங் களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளிலும் இந்த நடைமுறையிலேயே வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.  ஆண்டுக்கு ஒரு முறை இந்த சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன்படி, தற்போது தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை வாகனங்களுக்கு ஏற்றாற்போல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

இதனால், லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சுங்கக்கட்டண உயர்வை கண்டித்தும், ஜிபிஆர்எஸ் முறையை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் இன்று மாநிலம் முழுவதும் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேலம் கருப்பூர் சுங்கச்சாவடியில் சம்மேளனத்தின் மாநிலத்தலைவர் தன்ராஜ் தலைமையில் லாரி உரிமையாளர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் லாரி தொழில் பெரிதும் பாதிப்படைகிறது என்றும், இக்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல், சங்ககிரி வைகுந்தத்தில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாழப்பாடி மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியிலும் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி, நாமக்கல், சென்னை, வேலூர், மதுரை, திருச்சி என மாநிலம் முழுவதும் 55 சுங்கச்சாவடிகளிலும் இப்போராட்டம் நடந்தது. இதுபற்றி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத்தலைவர் தன்ராஜ் கூறியதாவது: டீசல், இன்சூரன்ஸ் மற்றும் இதர வரியினங்களின் உயர்வால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், சுங்கக்கட்டணத்தையும் ஆண்டுதோறும் 10 சதவீதம் வரை அதிகரித்து விடுகிறார்கள். இதனால், லாரி உரிமையாளர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். தற்போது, தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதன் மூலம் வட மாநிலங்களுக்கு சரக்கு கொண்டுச் செல்லும் லாரிகளுக்கான செலவினம் ₹5 ஆயிரம் வரை அதிகரித்திருக்கிறது.

சேலத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் லாரிக்கு ₹4,300ம், சேலம்-கவுகாத்தி லாரிக்கு ₹4,000ம், சேலம்-அகமதாபாத் லாரிக்கு ₹2,220ம், சேலம்-கேரளா லாரிக்கு ₹1,300ம், சேலம்-சென்னை லாரிக்கு ₹350ம் சுங்கக்கட்டணம் அதிகரிக்கிறது. இக்கட்டண உயர்வின் காரணமாக லாரி வாடகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். வாடகையை உயர்த்தினால், விலைவாசி உயரும். அதனால், சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். அதேபோல், அடுத்து ஜிபிஆர்எஸ் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த இருப்பதாக நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்து வருகிறது. அந்த ஜிபிஆர்எஸ் முறை, தற்போது இருக்கும் சுங்கச்சாவடி முறையை விட கொடுமையானது. அதில், சுங்கம் கொண்ட சாலைக்கு வாகனம் சென்றாலே ஆன்லைனில் கட்டணம் வசூலிக்கப்பட்டு, வாகன உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடும். அதனால், ஜிபிஆர்எஸ் முறையை அமல்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Lorry ,Tamil Nadu , Truck owners staged protest across Tamil Nadu protesting the increase in toll fees by blocking 55 toll booths: State President's sensational interview
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது