18 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் தொடர் ஸ்டிரைக்

புதுச்சேரி, மே 26: 18 மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று துவங்கினர். இதனால் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் 650க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 18 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து பணி ெசய்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரேஷன் கடை ஊழியர்கள், சம்பளம் வழங்கக்கோரி திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மேலும், லாரிகளில் கடைகளுக்கு வந்த இலவச அரிசியை இறக்க மறுத்தனர். ரேஷன் கடை நிர்வாக அதிகாரி ஜோதிராஜ், போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 10 நாட்களுக்குள் முதல்கட்டமாக 2 மாத சம்பளம் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்ட ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். பின்னர் பொதுமக்களுக்கு இலவச அரிசி விநியோகிக்கப்பட்டது.

40 சதவீத மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில கடைகளுக்கு இன்னும் அரிசி லோடு வரவில்லை. இந்நிலையில் அதிகாரி உறுதியளித்து 10 நாட்களுக்கு மேலாகியும், சம்பளம் வழங்காததால் நேற்று ரேஷன் கடை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இளங்கோ நகரில் உள்ள ரேஷன் சங்க நிர்வாக அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கூட்டமைப்பு தலைவர் லட்சுமணசாமி தலைமை தாங்கினார். ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் ஆதிநாராயணன் மற்றும் 300க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.18 மாத சம்பளம் வழங்க வேண்டும், குடிமைப்பொருள் வழங்கல் துறையில் இணைத்து அதன் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் எனவும், அதுவரை இலவச அரிசி வழங்கப்படாது எனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஊழியர்களின் ஸ்டிரைக்கால் புதுச்சேரி மக்கள் இலவச அரிசி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

× RELATED பள்ளிகளை ஆய்வு செய்ய கவர்னர் உத்தரவு