×

காதலியை பார்க்க சென்றபோது நரிக்குறவ வாலிபரை சங்கிலியால் கட்டி வைத்து தண்டனை: வீடியோ வைரல், போலீசார் விசாரணை

திருப்போரூர்: காதலியை பார்க்க சென்ற இடத்தில் நரிக்குற வாலிபரை சங்கிலியால் கட்டி வைத்து, பெண்ணின் உறவினர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் செல்லும் வழியில், வடநெம்மேலி கிராமத்தில் நரிக்குறவர் குடியிருப்பில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மகன் வெங்கடேசன் (18). இவர், ரோட்டில் கிடக்கும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தும், பாசிமணிகள் விற்றும் பிழைத்து வந்துள்ளார். இவருக்கும் திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் சமத்துவபுரத்தில் நரிக்குறவர் குடியிருப்பில் வசித்து வந்த 16வயதுள்ள நரிக்குறவ இளம்பெண்ணுக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒன்றாக பாசிமணி வியாபாரம் செய்யும் இடத்தில், இவர்களுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் சமூகத்தில் வேறு பிரிவை சேர்ந்தவர் என்று கூறி, காதலை ஏற்க மறுத்து அப்பெண்ணை அவர்கள் கண்டித்துள்ளனர். அதேபோல், நரிக்குறவர் வெங்கடேசனின் பெற்றோரும், தங்கள் மகனை கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று வெங்கடேசன் தன் காதலியை பார்ப்பதற்காக, நரிக்குறவர் சமத்துவபுரத்தில் உள்ள குடியிருப்பிற்கு சென்றுள்ளார். அங்கு, அப்பெண்ணின் உறவினர்கள் அனைவரும் வெங்கடேசனை கும்பலாக சூழ்ந்து கொண்டு எப்படி எங்கள் பெண்ணை பார்க்க வரலாம் என்று கூறி அவரை அடித்துள்ளனர்.

இனி இந்த பக்கம் நீ வரக்கூடாது என்று, அப்பெண்ணின் எதிரிலேயே இரு கால்களை சங்கிலியால் கட்டியும், கைகளை கட்டியும் ஒருநாள் முழுக்க உட்கார வைத்து நூதன தண்டனை வழங்கினர். அப்போது, அந்த பெண் தன் காதலனை சங்கியால் கட்டியிருந்த கோலத்தை பார்த்து அழுது கொண்டே இருந்தார். இதுகுறித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒருநாள் முழுக்க சங்கிலியால் கட்டி தண்டனை கொடுக்கப்பட்ட நரிக்குறவர் வெங்கடேசனை, அப்பெண்ணின் உறவினர்கள்  கண்டித்து நேற்று மாலை 6.30 மணியளவில் சங்கிலியை அவிழ்த்து அவரை விடுவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும், புகார் அளிக்காத நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ காட்சிகளை வைத்து, மாம்பாக்கம், மணிமங்கலம் குடியிருப்பு பகுதியில் எந்த இடம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : A fox boy was chained and punished when he went to see his girlfriend: Video goes viral, police investigate
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்