×

அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடியை சத்யா ஸ்டுடியோவிடமிருந்து வசூலிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை: அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கியான 31 கோடி ரூபாயை சத்யா ஸ்டுடியோவிடமிருந்து வசூலிக்கவும், மீட்கப்பட்ட நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடையாறு பகுதியில் உள்ள சத்யாஸ் டுடியோ நிறுவனத்திற்கு 1968ல் 93,540 சதுர அடி நிலத்தைத் தமிழ்நாடு அரசு குத்தகைக்குக் கொடுத்தது. 1998-ல் அந்த குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், அந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், குத்தகை காலம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

அதன் பிறகு 2004-ம் ஆண்டு வரை 31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியைச் செலுத்தக் கோரி மயிலாப்பூர் வட்டாட்சியர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியும் செலுத்தாததால், நிலத்தை திருப்பி எடுத்து 2008-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சத்யா ஸ்டுடியோ சார்பாக நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், 2019-ம் ஆண்டில் அடையாறு நோக்கி செல்லக்கூடிய பசுமை வழி சாலை மற்றும் டி.ஜி.எஸ் தினகரன் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக, அரசு இசைக் கல்லூரி வழியாக சத்யா ஸ்டுடியோ அருகில் அமைந்துள்ள அரசு நிலத்தை அடைந்து துர்காபாய் தேஷ்முக் சாலைக்கு இணைப்பு சாலை அமைக்க அரசு திட்டம் தீட்டியது.

இந்த வழக்கு காரணமாக அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு துறைகளுக்கு இடையே நில பரிமாற்ற திட்டங்கள் நிலுவையில் இருந்து வந்தன.இந்த நிலையில் 2008-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், அரசுக்கு செலுத்த வேண்டிய 31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், சத்யா ஸ்டுடியோ அருகில் உள்ள அரசு நிலத்திற்கு வேலி அமைத்து பாதுகாக்கவும், 2019 ஆம் ஆண்டு திட்டப்படி இணைப்பு சாலை அமைக்கும் பணியை தொடரவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Tags : Chennai High Court ,Tamil Nadu Government ,Satya Studio , Madras High Court directs Tamil Nadu government to collect 31 crores from Sathya Studio due to lease of government land..!
× RELATED சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு;...