×

ஏப்ரல் 1 முதல் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தங்க நகைகளின் மீது HUID 6 இலக்க எண் கட்டாயம்: விதிமீறல் இருந்தால் சிறைத்தண்டனை

சென்னை: வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தங்க நகைகளின் மீது HUID 6 இலக்க எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைவன சென்னை பிரிவு தலைவர் பவானி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 170 ஹால்மார்க் முத்திரை மையங்கள் உள்ளது. 13341 தங்க நகை விற்பனையாளர்கள் உள்ளனர். சென்னை தரமணியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் பவானி, ஒவ்வொரு நகைக்கடைக்கும் 6 இலக்க HUID எண் தனியாக வழங்கப்படும்.

ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே விற்க அனுமதிக்கப்படும் என அறிவித்தார். Bureau of indian standards அமைப்பின் BISCARE APP-ல் 6 இலக்க எண்ணை பதிவிட்டு நகை விவரங்களை அறியலாம். லேசர் கட்டிங் முறையில் ஹால்மார்க் விவரங்களை தங்க நகைகளில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். 2 கிராமிற்கு குறைவான எடை கொண்ட நகைகளுக்கு புதிய விதிமுறைகள் கட்டாயமில்லை. ஆண்டுக்கு ரூ.40 லட்சத்திற்கும் குறைவான விற்பனை நடைபெறும் கடைகளுக்கு புதிய விதிகள் கட்டாயமில்லை. தமிழகத்தில் ஹால்மார்க் பதிவு செய்யும் மையங்கள் உள்ள 26 மாவட்டங்களில் முதலில் நடைமுறைப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் விரைவில் மற்ற 12 மாவட்டங்களிலும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டார். புதிய விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் ரூ.1 லட்சம் அல்லது நகை விலையில் 5 மடங்கு அபராதம். விதிமீறல் இருந்தால் அபராதம் அல்லது சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் 288 மாவட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை, தங்கத்தின் தரத்துடன் (காரட்) 6 இலக்க HUID எண் கட்டாயமானது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தங்க நகைகளின் மீது 6 இலக்க HUID எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : HUID , HUID 6-digit number mandatory on gold jewelery to ensure customer safety from April 1: Violation punishable by jail term
× RELATED இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண்...