×

தேவதானப்பட்டி பகுதி மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து அதிக மகசூலை அள்ளலாம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை ‘அட்வைஸ்’

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்தால் கோடி நன்மை கிடைக்கும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, காமக்காபட்டி, கோட்டார்பட்டி, ராமபுரம், செங்குளத்துப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, மஞ்சளாறு அணை கிராமம், டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, கதிரப்பன்பட்டி, தர்மலிங்கபுரம், வேல்நகர், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி, வரதராஜ்நகர், முதலக்கம்பட்டி, வைகைபுது£ர் உள்ளிட்ட 30கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன.

இந்த பகுதியில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. இது தவிர விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு அதற்கு அடுத்தபடியாக உள்ளது. இந்த பகுதியில் பெரியகுளம் வராகநதி ஆற்றுப்பாசனம் மற்றும் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை பாசனம் மூலம் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுகிறது. ஆற்றுப்பாசனம் மற்றும் அதன் உபரி வாய்க்கால் பாசனம், கண்மாய் பாசனம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் நன்செய் நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர ஆற்றுப்படுகையை ஒட்டிய பகுதி, கண்மாயை ஒட்டிய பகுதி, மழையை மட்டும் நம்பி உள்ள தடுப்பணைகள் ஒட்டிய விவசாய பகுதிகளில் புன்செய் தோட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது.

மஞ்சளாறு அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதிகளில் உள்ள இடங்களில் மானாவாரியாக பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா, சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்படி முழுக்க முழுக்க தேவதானப்பட்டி பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே நடைபெற்று வருகிறது. நன்செய் மற்றும் புன்செய் நிலங்களுக்கு சமமாக மானாவாரி நிலங்கள் உள்ளன. இந்த வகையான மானாவாரி நிலங்களில் அந்த அந்த பகுதிக்கு ஏற்ப நிலக்கடலை, எள், சோளம், நாட்டுசோளம், கம்பு, பாசிப்பயறு, தட்டைபயறு, மொச்சை, கானம், கள்ளுப்பயறு, ஆமனக்கு, குதிரைவாலி, பருத்தி, ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பருவமழை போதிய அளவிற்கு பெய்ததால் கடந்த காலங்களை காட்டிலும் அதிகளவில் சாகுபடி பரப்பு அதிகரித்தது.

குறிப்பாக மானாவாரி நிலங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டது. மேலும் பயன்பாட்டிற்கு வராத மானாவாரி நிலங்களில் கூட விவசாயிகள் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்தனர். இந்நிலையில் தற்போது மானாவாரி நிலங்களில் சாகுபடி பயிர்கள் அறுவடை முடிந்த நிலையில் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்தால், நிலங்கள் பக்குவப்படும் என கூறப்படுகிறது. கோடை காலம் என்பது ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் ஆகும். இந்த கோடை காலங்களில் நிலங்களை உழவு செய்யும் போது மண்ணில் பல்வேறு பயன்கள் ஏற்படுகிறது.

கோடை உழவு செய்யும்போது மண் பொலபொலவென ஆவதால் மண்ணிற்கு சீரான காற்றோட்டம் கிடைக்கிடைக்கிறது. இந்த காற்றோட்டத்தினால் மண்ணுக்குள் இருக்கும் நுண்ணுயிரிகளுக்கு தேவையான காற்று கிடைக்கிறது. கோடை உழவு செய்யாமல் நிலங்கள் தரிசுகளாக இருந்தால் கோடை மழை பெய்யும் போது விளைநிலங்களில் மழை தேங்காமல் வழிந்தோடிவிடும். ஆனால் கோடை உழவு செய்த நிலங்களில் மழைநீர் அப்படியே மண்ணின் அடி ஆழம் வரை சென்று தண்ணீரை தக்கவைத்துக் கொள்ளும். கோடை உழவு செய்யும் போது மண்ணில் உள்ள தீமை செய்யும் புழுக்களில் முட்டை அளிந்து விடும், மண்ணில் உள்ள கிருமிகள் இறந்துவிடும், தீமை செய்யும் புழுக்கள் இறந்துவிடும்.

மேலும் குறிப்பாக களைச்செடிகள் முற்றிலும் காய்ந்து, அதன் விதைகள் அடுத்த பயிர் சாகுபடி நேரத்தில் அழிந்துவிடும். குறிப்பாக கோடை உழுவு செய்வதால் மழைநீர் வெளியே சென்று மண்ணரிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை. இதனால் நமது நிலத்தில் ஏற்கனவே உள்ள ஊட்டச்சத்துகளும், நம்மால் இடப்பட்ட ஊட்டச்சத்துகளும் வேறு நிலங்களுக்கு செல்லாமல் நமது நிலத்திலேயே பாதுகாக்கப்படுகிறது.

மண்வளம் பாதுகாக்கப்படும்
வேளாண்மைத்துறையினர் கூறுகையில், ‘‘தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் மானாவாரி மற்றும் களைச்செடிகளால் பாதிப்படைந்த நிலங்கள், மண் வளம் குறைந்த நிலங்களில் விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் . இதனால் மண் வளம் பாதுகாக்கப்படும். அடுத்த சாகுபடியின் போது பயிர்களில் களைச்செடிகளின் தொந்தரவு குறையும், பூச்சிகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதலில் இருந்து பயிர்கள் பாதுகாக்கப்படும். இதனால் பயிர்களில் நோய் தாக்குதல் குறையும். பயிர்சாகுபடிக்கு தேவையான நுண்ணுயிர்கள் இயற்கையாகவே மண்ணில் அதிகரிக்கும். இதனால் பயிர்களின் வீரியம் அதிகரிக்கும் போது ஓரிரு பூச்சி தாக்குதல் இருந்தாலும், தானாக குறைந்துவிடும்.

பயிர்களுக்கு தேவையான இயற்கையாக கிடைக்கும் அத்தனை ஊட்டச்சத்துக்களும் சரிவிதிக அடிப்படையில் கிடைக்க வாய்ப்புள்ளது. கோடை உழவு மூலம் சாகுபடி பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் போது விவசாயிகள் ரசாயன உரப்பயன்பாட்டை குறைக்க வாய்ப்புள்ளது. ரசானய மருந்து, உரம் பயன்பாடு குறைந்தால் நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் கால்நடைகள், பிற உயிர்கள் பாதிக்கப்படுவது பெருமளவில் குறைக்கப்படுகிறது. ஆகையால் தற்போது பெய்யும் கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் விளைநிலங்களை கோடை உழவு செய்து பயன்பட வேண்டும்’’ என்றார்.

Tags : Devadhanapatti rainfed lands can be plowed in summer for higher yields: Agriculture Department 'advice' to farmers
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...