×

உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு அபராதம்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மதுரை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாவட்டம், எழுமலை பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பேரூராட்சி செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெயபால் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை 8 வாரத்திற்குள் அகற்ற வேண்டுமென 29.9.2022ல் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த அவகாசம் 24.11.2022 உடன் முடிந்துவிட்டது. அவகாச காலத்தை நீட்டித்து தரக்கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த காலகட்டம் வரை ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எந்தவிதமான நோட்டீசும் வழங்கப்படவில்லை. ஆனால், 26.12.2022ல் தான் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து இரு நோட்டீஸ்கள் கொடுத்த பிறகே ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறியுள்ளனர்.

ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறுவதற்கான நடவடிக்கை எடுத்த பேரூராட்சி செயல் அலுவலரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதே நேரம் பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பதையும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே உரிய நடவடிக்கை எடுக்கும் பழக்கத்தை பெரும்பாலான அதிகாரிகள் பின்பற்றுகின்றனர். அரசு அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கை ஆரோக்கியமானதல்ல. எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதால் மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.



Tags : Penalty for officers who do not comply with orders: Court branch warns
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...