×

காலங்காலமாக வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருந்த பெண்ணினத்திற்கு பொருளாதார அதிகாரத்தை அளித்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேச்சு

திருவள்ளூர்: சட்டப்பேரவையில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேசியதாவது: பட்ஜெட்டில் எல்லா பிரிவினருக்கும் சம பங்கு பிரித்துக்கொடுத்திருக்கக் கூடிய முதலமைச்சருக்கு நன்றி தெரவித்துக் கொள்கிறேன்.  ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா. பெண் விடுதலையை உறுதி செய்து சொத்துரிமை தந்தவர் கலைஞர், காலங்காலமாக வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருந்த பெண்ணினத்திற்குப் பொருளாதார அதிகாரத்தை அளித்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னாள் முதல்வர் கலைஞர் சொன்னதை செய்வார். செய்வதைத் தான் சொல்வார். ஆனால் சொல்லாததையும் செய்து காட்டியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சரின் புதுமைப் பெண் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்கி இன்றைக்கு ஒவ்வொரு மாணவியும் உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பினைப் பெற்றுத் தந்த முதல்வர் இந்த ஆண்டும் அதிக நிதியினை இந்த திட்டத்திற்காக ஒதுக்கி தந்திருக்கிறார்.

கடந்த 2006 - ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு வீடு வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்குவோம் என்ற வாக்குறுதியை தந்தார். அதன்படி சொன்னதை செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் 2 கோடி மக்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்கினார். அதே போல் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் வீதம் வழங்குவதாகவும் அதற்காக ரூ.7 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து பெண்களுக்கான பொருளாதார அதிகாரத்திற்கு நமது முதல்வர் வித்திட்டிருக்கிறார். தமிழ்நாட்டை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஒலிக்க வைக்கும் என்ற நம்பிக்கை மக்களின் மனதில் பிறந்துள்ளது. பூந்தமல்லி நகரில் ஸ்போர்ட்ஸ் அகாடமியைத் திறந்தால் சிறப்பாக இருக்கும். மேலும், ஏழைகளின் விளையாட்டான பூ பந்தாட்டம்,  கால் பந்தாட்டம், கபடி போன்ற விளையாட்டுக்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் ஒவ்வொரு நகராட்சியிலும், ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஒரு கால்பந்தாட்ட விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்க வேண்டும். வண்டலூர் நெமிலிச்சேரி 400 அடி சாலையில் இசிஆர் சாலையுடன் இணைக்கக்கூடிய அந்த சாலையில் டைடல் பார்க்கை கொண்டு வர வேண்டும்.

பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காட்டுப்பக்கத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு காங்கிரிட் கூரை வீடுகளை பாபு ஜெகஜீவன்ராமை வைத்து தொடங்கிய ஆட்சி தான் திமுக ஆட்சி. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்த கட்சி தான் திமுக. உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் ஆதிதிராவிடர்கள் நீதிபதிகளாக வந்தார் என்றால் அதற்கு காரணம் திமுக தான். காவல் துறை இயக்குனர், தலைமைச் செயலாளர் ஆகிய பதிவுகளுக்கு எல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் வந்ததற்கு காரணம் திமுக ஆட்சி தான். அண்ணல் அம்பேத்கர் சட்ட பல்கலை கழகம் கொண்டு வந்ததும் திமுக ஆட்சி தான். அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்ததும் திமுக தான். அதுமாத்திரமல்ல அண்ணல் அம்பேத்கரின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பேசினார்.


Tags : Chief Minister ,M.K.Stalin ,A.Krishnaswamy ,MLA , Women, Economic Empowerment, Presented by Chief Minister, A. Krishnasamy MLA, Speech
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து