×

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் சாலையில் சிதறிய சிலிண்டர்கள்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் சிக்னலில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் சிலிண்டர்கள் சாலையில் சிதறியது. இதனால், வண்டலூரில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூடுவாஞ்சேரியில் இருந்து வண்டலூர் நோக்கி நேற்று இரவு 7:30 மணி அளவில் வாகனங்கள் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தது. அப்போது, வண்டலூர் சிக்னலில் வலது பக்கம் திரும்புவதற்காக காய்கறி ஏற்றி வந்த சரக்கு வேன், 66 சிலிண்டர் ஏற்றி வந்த மினி வேன் மற்றும் கார் அடுத்தடுத்து ஊர்ந்து சென்றது. அப்போது, இந்த மூன்று வாகனங்களின் பின்னால் தாறுமாறாக வந்த டாரஸ் லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில், மோதிய வேகத்தில் கார் சிலிண்டர் வேன் மீதும் சிலிண்டர் வேன் காய்கறி வேன் மீதும் அடுத்தடுத்து மோதியது. அப்போது சிலிண்டர் வேனில் இருந்து சிலிண்டர்கள் சாலையில் பறந்தன. இதில் சிலிண்டர்கள் மீது லாரி ஏறி இறங்கியது. இதனை கண்டதும் லாரி டிரைவர் தப்பி ஓட்டம் பிடித்தார். உடனே அங்கிருந்த போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் காருக்குள் சிக்கி இருந்த பெருங்களத்தூர் அடுத்த சதானந்தபுரத்தை சேர்ந்த ஜூடு (48), கிருஷ்ணமூர்த்தி (48), தேவா (22), ராஜா (25) ஆகிய 4 பேரையும், இதேபோல் சிலிண்டர் ஏற்றி வந்த டிரைவர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த சுரேஷ்பாபு (43) என்பவரையும் மீட்டனர்.

இதில், அனைவரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில், கார் நாலாபுறமும் அப்பளம்போல் நொறுங்கி திசை மாறி திரும்பி நின்றது. மேலும், இது குறித்த புகாரின்பேரில் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லாரி டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உத்திரமேரூர்: வேலூரில் இருந்து இன்டேன் நிறுவனத்தின் காலி சிலிண்டர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு, ஓட்டுநர் முரளி என்பவர், படப்பை அருகே உள்ள சிலிண்டர் நிரப்பும் கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, உத்திரமேரூர் அருகே பிளாஞ்சிமேடு பகுதியில், லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலை முழுவதும் சிலிண்டர்கள் சிதறியது. இதைகண்ட அக்கம் பக்கத்தினர், பலத்த படுகாயமடைந்த ஓட்டுநரை மீட்டு, சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து மாகரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சாலையில் சிதறி கிடந்த சிலிண்டர்களை, அகற்றிவிட்டு போக்குவரத்தினை சீர்செய்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : In succession, vehicles collide, road, scattered cylinders
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...