×

வீட்டு வேலை செய்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட 1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000: வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்; சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி சென்று மீன் வியாபாரம் செய்யும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் 1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் விளக்கமளித்துப் பேசினார்.

தமிழக சட்டப் பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைமீது நேற்று நடந்த விவாதத்தின்போது, பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி பேசும் போது, இந்த நிதிநிலை அறிக்கை வெளியிடும் போது பெண்களுக்கான உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் இந்த திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட தொகை கிடைக்காதவர்களுக்கும்  வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதாவது: உறுப்பினர் ஜி.கே. மணி,  மகளிர் உரிமைத் தொகை பற்றிப் பேசுகிறபோது, மனந்திறந்துப் பாராட்டினார். ஆனால், அதே நேரத்தில், கிடைக்காதவர்களின் நிலை என்ன என்று ஒரு கேள்விக்கணையையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது இந்த அவையிலே மட்டுமல்ல; வெளியிலேயும், அதிலும் குறிப்பாக, பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும், அதையும் தாண்டி, பல சமூகவலைதளங்களிலும் இதுகுறித்து பல்வேறு விவாதங்கள், விமர்சனங்கள் செய்தும், பாராட்டியும், புகழ்ந்தும் தொடர்ந்து பேசியும், எழுதியும் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் ஒரு நீண்ட விளக்கத்தை நான் இந்த அவையில் பதிவு செய்வது என் கடமை.

பேரவைத் துணைத் தலைவரே, சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் அறிவுச்சுடர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, நவீன தமிழகத்தைக் கட்டமைப்பதில் நம்முடைய தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆகியோர் வகுத்தளித்த பாதையில், தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாக உருவாக்கவும்,  அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழச் செய்யவும், நாள்தோறும் எண்ணற்ற மக்கள்நலன் சார்ந்த திட்டங்களை நமது அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், இந்த நூற்றாண்டின் மகத்தான திட்டமான ‘மகளிர் உரிமைத் தொகை’ குறித்த அறிவிப்பு வெளியாகி, நாடெங்கும், உலகெங்கும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் கவனத்தையும் அது ஈர்த்துள்ளது. சமூகத்தில் வெற்றி பெறும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு.  இப்படிக் கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அங்கீகரித்தால், ஆண்களை உள்ளடக்கிய இந்தச் சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகும் என்று நமது அரசு உறுதியாக நம்புகிறது.

எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது. ‘Universal Basic Income’, என்ற பெயரில் உலகில் பல நாடுகளில் சோதனை முறையில், குறிப்பிட்ட சில பகுதிகளில், ஒரு சில சமூகப் பிரிவினரிடம் மட்டும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்படிப் பரிசோதனை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் மூலமாகவே, பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் மூலம், வறுமை பாதியாகக் குறைய வாய்ப்புள்ளது என்றும், கிடைக்கும் நிதியைப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவச்செலவு செய்யவும் முன்னுரிமை தருகிறார்கள் எனவும், சிறு சிறு தொழில்களைச் செய்ய முன்வருகிறார்கள் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக, தன்னம்பிக்கை பெற்றுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பரிசோதனை முயற்சியாக உலகில் சில நாடுகளில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்திய திட்டத்திற்கே இவ்வளவு பயன்கள் கிடைக்கின்றன என்றால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட போகும் இந்த மாபெரும் முயற்சி, எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கப் போகும் பயன்களை, இந்த மாமன்ற உறுப்பினர்கள் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

இந்த ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டத்திற்காக, இந்த நிதிநிலை அறிக்கையில்  ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதையொட்டி, எவ்வளவு பேர் பயன்பெறுவார்கள் என்று பலர் மனக்கணக்குப் போட்டு வருகிறார்கள்.   இதுகுறித்து என்னுடைய கருத்தைப் பதிவு செய்வதற்கு முன்னால், ஒன்றை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஊடகம் ஒன்றில், “இந்தத் திட்டத்தின் உதவியைச் செல்வந்தர்களுக்கும், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் கொடுக்கலாமா?” என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ‘இல்லாத ஏழை மக்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும்’ என்று ஒரு பெண்மணி பதில் சொல்கிறார்.

இந்தத் திட்டம் யாருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்களுக்கே தெரிகிறது. ‘பகிர்தல் அறம்’ என்றும்; ‘பசித்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்றும்; தமிழ் மரபின் தாக்கத்தால் உருவான நலத் திட்டங்களின் நோக்கமும், தேவையானவர்களுக்குத் தேவையான உதவியை, உரிய நேரத்தில் தேடித் தேடி வழங்குவதில்தான் இருக்கும். ‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டால், வீடு இல்லாதவர்களுக்கு ஓர் கனவு இல்லம் அமைத்துத் தருவது என்று பொருள்.  ‘அனைவருக்கும் நிலம்’ என்றொரு திட்டம் என்றால், நிலமற்ற கூலித் தொழிலாளர்கள், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்பதுதான் அடிப்படை நோக்கம்.  ‘முதியோர் ஓய்வூதியம்’ என்றால், ஆதரவற்ற முதியோரின் நலன் காக்க முனையும் திட்டம் என்று பொருள்.  

அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் என்றால், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு முன்னுரிமை என்று பொருள். அந்தவகையில், இந்த ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ இரண்டு நோக்கங்களைக் கொண்டது.  பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.  

மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ரூ.1000ஆயிரம் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
 நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.   

இதைச் செய்ய முடியுமா? இதற்கு நிதி இருக்குமா என்றெல்லாம், கேள்விகளை எழுப்பி, திமுக அரசு இதைச் செய்துவிடுமோ என்ற தங்கள் அச்சத்தை பல்வேறு வகைகளிலே வெளிப்படுத்தி வந்தவர்களுக்கு பதிலளிக்கக்கூடிய விதமாக, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதி திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் விளங்கவுள்ள, இந்த மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஏறத்தாழ 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்குச் சமூக விடுதலை பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் என்றால், பொருளாதாரச் சமத்துவத்தை வழங்குவதுதான் திராவிட மாடல் அரசு என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். மாதம் ரூ.1000 தங்கள் வாழ்வை சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும் எந்தக் குடும்பத் தலைவியையும், மனிதநேய அடிப்படையிலான பெண் உரிமை காக்கக்கூடிய எனது தலைமையிலான திமுக அரசு கைவிட்டுவிடாது என்று உறுதியளிக்கிறேன்.  இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* தாலுகாவுக்கு ஒரு நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை: பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
தமிழ்நாடு சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கிள்ளியூர் தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) பேசுகையில், ‘கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் அல்லது சுழல் நீதிமன்றமாவது அமைத்து தரப்படுமா? என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், ‘‘நடப்பு நிதி ஆண்டில் நீதிமன்றம் அமைக்க வாய்ப்பு இல்லை. அடுத்த நிதியாண்டில் நிதி நிலைமைக்கு ஏற்ப கிள்ளியூரில் சார்பு நீதிமன்றம் அமைக்க பரிசீலனை செய்யப்படும். தொடர்ந்து சுழல் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் கேட்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது எங்கும் சுழல் நீதிமன்றங்கள் செயல்படவில்லை. எனினும் தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்ற அரசின் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை. எதிர்காலத்தில் அவை நிறைவேற்றப்படும்’’ என்றார்.

* 100 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டிலிருக்கிற சுமார் 100க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டுமென்று ஏற்கனவே கோரிக்கை வைத்திருக்கிறோம். அந்த கோரிக்கை நிறைவேறும்பட்சத்தில் நிச்சயம் உறுப்பினர்களின் கோரிக்கையையும் பரிசீலிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுவது என்பது நிதியாதாரத்தைப் பொறுத்தும், பணியிடங்கள் கூடுதலாக்குவதும் என்கின்ற இரு விஷயங்கள் இருக்கின்றன. எனவே, அதைக் கருத்தில் கொண்டு தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 100 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே ஒன்றிய அரசிடம் அனுமதிக் கேட்டிருக்கிறார்.

* மாணவியருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் திராவிட மாடலின் ஆணி வேராக இருக்கும்: வரலட்சுமி மதுசூதனன் பேச்சு
சட்டப் பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீது நடந்த  விவாதத்தின் போது செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் பேசியதாவது: ஆதிதிராவிட மாணவர்களின் உயர்கல்வி, தங்குமிட வசதிகளை வழங்க மதுரை, கோவை, திருச்சி மற்றும் நீலகிரியில் ரூ.100 மதிப்பில் 4 விடுதிகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு மாற்றுத்  திறனாளிகளுக்கான பராமரிப்பு  உதவித் தொகை  ரூ.2 ஆயிரமாக உயர்த்தியுள்ளது ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வரும் நிதியாண்டில் ரூ.30 கோடி கடன் வழங்க  இருப்பது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உயர்கல்வி படிக்கும் மாணவியருக்கு ரூ.1000 வழங்குவதன் மூலம் நடப்பாண்டி 30 சதவீத சேர்க்கை அதிகரித்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் இந்த திட்டம் திராவிட மாடலின் ஆணி வேராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

* நிதி செலவை கண்காணிக்க சட்டம்
பேரவையில் நேற்று 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை பட்ஜெட் குறித்த விவாதத்தில் கே.வி.குப்பம் பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) பேசினார். அதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக செலவு செய்ய வேண்டும்  என்று அடுத்த ஆண்டு தனி சட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்றார்.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Legislative Assembly , Rs.1,000 per month for 1 crore women including domestic workers, construction workers: paid into bank account; Chief Minister M. K. Stalin's announcement in the Legislative Assembly
× RELATED நாட்டில் அடுத்து அமையவுள்ள நமது அரசு...