×

பரத நாட்டிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு? தனியார் அறக்கட்டளை இயக்குநர் டிஜிபியிடம் நேரில் விளக்கம்: தேசிய மகளிர் ஆணையம் புகாரால் பரபரப்பு

சென்னை: அடையாறில் உள்ள ஒரு அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரியில் பரதநாட்டியம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அந்த அறக்கட்டளையின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னை அடையாறை தலைமையிடமாக கொண்டு ஒரு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரியில் பரத நாட்டியம் மற்றும் இசை தொடர்பான பாடங்கள் கற்றுத்தரப்படுகிறது. மிகவும் பழமையான இந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரியில் வெளிநாடு மற்றும் நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரியில் பயின்று வந்த மாணவிகள் சிலர், தங்களுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக அறக்கட்டளை நிர்வாகிகளிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரின்படி விசாரணை நடத்த அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் குழு ஒன்று அமைத்து உத்தரவிட்டார். விசாரணை குழுவில் பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். பின்னர் புகாரின்படி, விசாரணை குழு உறுப்பினர்கள் கல்லூரி வளாகத்தில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு குறித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

ஆனால், விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரும், பாலியல் தொந்தரவு குறித்து எந்த குற்றச்சாட்டும் அளிக்கவில்லை. பிறகு விசாரணை குழு தங்களது விசாரணை அறிக்கையை அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனிடம் அளித்தனர். இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் பலர், பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக பதிவு செய்து, எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், கல்லூரி சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவினர் பொது ஆடிட்டோரியத்தில் விசாரணை நடத்தினர்.

இதனால் எங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சரியாக புகார் அளிக்க முடியவில்லை. எனவே விசாரணை குழு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகளிடம் தனித்தனியாக ரகசிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து மாணவிகள் சமூக வலைத்தளங்களில் அளித்த குற்றச்சாட்டை தொடர்ந்து ‘தேசிய மகளிர் ஆணையம்’ கவனத்திற்கு சென்றது. அதைதொடர்ந்து தேசிய மகளிர் ஆணையர், சம்பந்தப்பட்ட கல்லூரியில் படித்து வரும் மாணவிகளின் பாலியல் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு ‘டிவிட்டர்’ மூலம் தெரிவித்திருந்தார்.

மாணவிகளுக்கு ஆதரவாக ேதசிய மகளிர் ஆணையம் டிவிட்டர் பதிவு செய்ததால், இந்த பாலியல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதேவேளையில் மாணவிகளின் புகாரின் மீது நடவக்கை எடுக்க கோரி பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டோர் சமூக ஊடகங்கள் வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் வரை புகார் சென்றதால், அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் நேற்று முன்தினம் டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, மிகவும் பழமையான நிர்வாகத்தின் பெயரை கெடுக்கும் வகையில் சிலர் சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற பாலியல் புகார் பதிவு செய்து வருகின்றனர். பாலியல் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் எந்த மாணவிகளும் அப்படி ஒரு குற்றச்சாட்டை அளிக்கவில்லை. எங்கள் அறக்கட்டளை மீது வதந்தி பரபப்பும் நபர்கள் மீது உரிய நடவக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. அதேநேரம், மாணவிகளின் பாலியல் விவகாரம் தேசிய மகளிர் ஆணையர் வரை சென்றுள்ளதால், விரைவில் பாலியல் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை உரிய விசாரணை நடத்தும் என்றும், இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் மாணவிகளின் பாலியல் தொடர்பான பதிவுகளை பெற்று போலீசார் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக உயர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Private Foundation ,DGP ,National Commission for Women , Sexual harassment of Bharatanatyam students? Private Foundation Director Explains to DGP in person: National Commission for Women is in a frenzy over complaints
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு...