×

கலெக்டர் பெயரை பயன்படுத்தி பட்டுசேலை கடையில் பணம் பறிக்க முயன்றவர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், குரல் மாற்று ஆப் மூலம், கலெக்டர் பெயரை பயன்படுத்தி, பட்டுசேலை கடையில் பணம் பறிக்க முயன்ற பலே கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தானம் (எ) சந்தான பாரதி (45). டாக்ஸி ஓட்டுநரான இவர், பட்டுச்சேலை வாங்குவதற்காக காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளார். அப்போது, அருகில் இருந்த டீக்கடையில் பேப்பர் பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த பேப்பரில் இருந்த ஒரு செய்தியில் கலெக்டர் ஆர்த்தி என இருந்துள்ளது. இதையடுத்து, பட்டுச்சேலை கடையின் தொலைபேசியை தொடர்பு கொண்டு, குரல் மாற்று ஆப் மூலம் பெண் குரலில் பேசிய அந்த நபர், கலெக்டர் பெயரை பயன்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, சந்தேகமடைந்த வரமகாலட்சுமி பட்டுசேலை கடையின் உரிமையாளர் கோபிநாத், காஞ்சிபுரம் போலீஸ் எஸ்பி சுதாகரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார், அந்த நபரை கைது செய்து நடத்திய விசாரணையில், வாணியம்பாடி, திருப்பூர், ஈரோடு, ஊட்டி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்றபோது, அந்த மாவட்ட கலெக்டர்களை போன்று பேசி தொழிலதிபர்களை மிரட்டி, பணம் பறிப்பில் ஈடுபட்டதும், காஞ்சிபுரம் கலெக்டர் பெண் என்பதால், குரல் மாற்று ஆப் மூலம் மாற்றிபேசி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

ஏற்கெனவே 4 மாவட்ட கலெக்டர்களின் பெயர்களை பயன்படுத்தி, அங்குள்ள தொழிலதிபர்களிடம் பணம் பெற்று மோசடி செய்த நிலையில், காஞ்சிபுரத்தில் பணமே பெறாமலேயே மோசடி நபர் போலீசிடம் சிக்கியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : A man who tried to extort money from a silk shop using the name of a collector was arrested
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்