
புதுடெல்லி: ராகுல்காந்தியை விமர்சனம் செய்த பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா வீட்டு முன்பு மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். லண்டன் சென்றிருந்த ராகுல்காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து கருத்து கூறியிருந்தார். இதனை பாஜ சர்ச்சையாக்கி வருகிறது. தனது கருத்துக்கு ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜ வலியுறுத்தி வருகிறது. பாஜ தலைவர் ஜேபி நட்டா வெளிநாட்டு சக்திகளுடன் ராகுல் இணைந்து செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் டெல்லியில் உள்ள பாஜ தலைவர் நட்டா வீட்டின் முன் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லி பிரதேச மகளிர் காங்கிரசை சேர்ந்த ஏராளமானவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 15 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.