×

நிலமற்ற தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.12 லட்சம் மானியத்தில் தள்ளுவண்டி விநியோகம்: நடப்பாண்டு 6,100 பேருக்கு வழங்க இலக்கு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நிலமற்ற தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய ரூ.12 லட்சம் மானியத்தில் தள்ளுவண்டி விநியோகம் செய்யப்பட உள்ளது. நடப்பாண்டு 6100 பேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மலை மற்றும் வனம் சார்ந்த நிலங்கள் பரவி கிடப்பதால், தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறி, பழங்கள், மலர்கள், வாசனை திரவிய பயிர்கள், மருத்துவ பயிர்கள், மலைத்தோட்ட பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் விளையும் காய்கறிகள், மஞ்சள், பூக்கள், வாசனை திரவிய பயிர்கள் வெளி மாவட்டத்திற்கும், வெளிமாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது. குறிப்பாக சொட்டுநீர் பாசனத்தில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிக மானியம் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை ஆர்வத்துடன் சாகுபடி செய்கின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம், நடப்பாண்டில்  தோட்டக்கலை இடுப்பொருட்கள், வேளாண் கருவிகள் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய வகையில் 26,123 விவசாயிகள் ரூ.44.19கோடி மானியம் பெற்று பயனடைந்துள்ளனர். மேலும், நடப்பாண்டு 6100 சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலமற்ற தொழிலாளர்கள் மற்றும் சிறு- குறு விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் மகளிர் சொந்த தொழில் செய்ய முதல்கட்டமாக ரூ.12 லட்சத்தில் 40 விவசாயிகளுக்கு மானியத்தில் தள்ளுவண்டி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில், மாடித் தோட்டம் அமைத்தல், காய்கறி விதை தளைகள், தாங்கி குச்சிகள் அமைத்தல், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு 6100 சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யவும், விவசாயிகள் மதிப்புகூட்டு பொருட்கள் உற்பத்தியை சந்தையில் விற்பனை செய்ய வசதியாக முதல் கட்டமாக ரூ.12 லட்சத்தில் 40 சிறு, குறு விவசாயிகள், வியாபாரிகள், மகளிருக்கு தள்ளுவண்டி வழங்கப்படுகிறது.

தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்  ஆகிய வட்டாரத்தில் உள்ள 40 பயனாளிகளுக்கு, தள்ளுவண்டி மானியத்தில் வழங்கப்பட உள்ளது. ஒரு தள்ளுவண்டி ரூ.30ஆயிரம் மதிப்பு கொண்டது. மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும், தேவைப்படும் தரமான பயனாளிகள் கண்டறிந்து, அவர்களுக்கும் மானியத்தில் பல்வேறு உப பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறினர்.


Tags : Distribution of trolleys to landless labourers, small and marginal farmers with a subsidy of Rs 12 lakh: Target to provide 6,100 people this year
× RELATED அரசு ஊழியர்கள் மற்றும்...