*வேளாண் பேராசிரியர்கள் ஆலோசனை
மன்னார்குடி : எள் பயிரில் உயர் விளைச்சல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விவசா யிகளுக்கு வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மைய பூச்சியியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ராஜா ரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் யுவராஜா ஆகியோர் கூறியதாவது:காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மாசிப்பட்டத்திலும், திருவா ரூர் மாவட்டத்தில் சித்திரைப் பட்டத்திலும் இறவைப் பயிராக எள் சாகுபடி செய்யப்படுகிறது. டிஎம.வி. 4 டிஎம.வி. 5, டிஎம்வி.6, டிஎம்வி. 7, எஸ்வி.பிஆர். 1, விஆர்ஐ. 1, விஆர்ஐ. 2 போன்ற உயர் விளைச்சல் ரகங்கள் பயிரிட ஏற்றவையாகும். டிஎம்வி.7 இரகமானது 80 முதல் 85 நாட்கள் வயதுடையது.
இறவையில் எக்கடருக்கு 920 கிலோ மகசூல் தரவல்லது. 80 சதம் எண்ணெய் சத்தைக் கொண்டது. எஸ்வி. பிஆர். 1 வெள்ளை எள் இரகமாகும். 75 முதல் 80 நாட்கள் வயதுடையது. எக்கடருக்கு 800 கிலோ மகசூல் தரவல்லது. 53.8 சதம் எண் ணெய் சத்தைக் கொண்டது.மணற்பாங்கான வண்டல், செம்மண் நிலங்கள் எள் சாகுபடிக்கு ஏற்றவை. மண்ணிலுள்ள கடிகளை உடைத்து நன்கு சமன்படுத்த வேண்டும். ஒரு ஏக் கருக்கு இரண்டு கிலோ எள் விதை போதுமானது. ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற எதிர் உயிர் பூசனம்; என்றள வில் விதைநேர்த்தி செய்து 24 மணி நேரம் கழித்து 500 கிராம் ‘அஸேபாஸ் ’யை குளிர்ந்த அரிசி கஞ்சியுடன் சேர்த்து அக்கலவையில் விதையை கலந்து அரை மணிநேரம் உலர வைத்து விதைக்க வேண்டும்.
வயலில் போதுமான ஈரம் இருக்கும் போது ஒருமுறை உழுதுவிட்டு விதை களை வரிசையில் விதைக்க வேண்டும் அல்லது 20 கிலோ மணலுடன் கல ந்து நிலத்தின் மேற்பரப்பில் பரவலாக விதைகளை தூவ வேண்டும். பிறகு மறுபடியும் உழுது அல்லது படல்கட்டி இழுத்து தூவிய விதைகளை மூடிவிட வேண்டும்.
களைகளை கட்டுப்படுத்த விதைத்த 3ம் நாள் வயலில் ஈரம் இருக்கும் போது புளுகுளோராலின் ஏக்கருக்கு 1.2 லிட்டர் அளவில் மணலுடன் கலந்து தூவ வேண்டும். அதைத் தொடர்ந்து 30 - 35 நாட்களில் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். விதைத்த 15வது மற்றும் 30ம் நாளில் செடிகளை களைந்து ஒரு சதுர மீட்டருக்கு 11 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
நெல் தரிசு எள் பயிரில் மாங்கனீசு நுண்ணூட்டச் சத்து குறைபாடு தோன்ற வாய்ப்புள்ளதால் இக்குறைப்பாட்டை போக்க ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீசு சல்பேட் உப்பை 20 கிலோ மணலுடன் கலந்து விதை விதைத்தவுடன் மண்ணில் சீராக தூவி விடவேண்டும்.தண்ணீர் வசதியுள்ள மணற்பாங்கான இடங்களில் வயல் நடுவில் வாய்க்கால் கள் அமைத்து தண்ணீர் இறைப்பதன் மூலம் பயிர் நன்றாக வளர வாய்ப்புள்ளது. களிமண் பூமியில் தௌிப்பு நீர் பாசன முறையை பின்பற்றி பயிர் வளர்ச்சியை மேம்படுத்தலாம்.
இறவை எள்ளுக்கு விதைத்தவுடனும், விதைத்த 7ம் நாளும் நீர் பாய்ச்ச வேண்டும். எள்பயிருக்கு முக்கியமான காலக்கட்டங்களில் அதாவது பயிரின் 5வது இலைப்பருவம், கிளை வெடிக்கும் சமயம், பூக்கும் காலம், காய் உருவாகும் காலம் மற்றும் எள் விதை முதிர்ச்சியடையும் சமயங்களில் நீர் பாசனம் செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.இறவைப்பயிராக சாகுபடி செய்யும்போது, ஏக்கருக்கு 14 கிலோ தழைச்சத்து 9 கிலோ மணிச்சத்து மற்றும் 9 கிலோ சாம்பல்சத்து அதாவது 30 கிலோ யூரியா, 56 கிலோ சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 15 கிலோ பொட்டாஷ் உரங்களை இடவேண்டும்.
இறவை எள் பயிருக்கு விதைக்குமுன் தனியாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக எள் நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 5கிலோ கிலோ என்ற அளவில் அதாவது 110 என்ற விகிதத்தில் 50 கிலோ நன்கு மக்கிய தொழுஉரத்துடன் ஒரு மாதம் கலந்து ஊட்டம் ஏற்றி வைத்திருந்து பின்பு இட வேண்டும்.
செடியில் கீழிலிருந்து 25 சத இலைகள் உதிர்ந்து விடுதல் மற்றும் காய்கள், தண்டுபாகங்கள் பழுப்பு நிறமாக மாறுதல் ஆகியவை எள் அறுவடைக்கான அறிகுறிகள் ஆகும். இவ்வாறு வேளாண் பேராசிரியர்கள் ராஜா ரமேஷ், யுவராஜா ஆகியோர் தெரிவித்தனர்.
