சென்னை: தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பை 33% அதிகரிக்கும் விதமாக, பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் 500 மரங்கள் நடப்பட்டன. தமிழகத்தில் தற்போது 23% காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு உள்ளன. இதனை அதிகரிக்கும் வண்ணம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘‘பசுமை தமிழகம் திட்டம்’’ கடந்தாண்டு தொடங்கி வைத்தார். இதுவரை 2.80 கோடி அளவிற்கு தமிழகம் முழுவதும் மரங்கள் நடப்பட்டுள்ளன. இதனை விரிவுப்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் மரம் நடுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்தநிலையில், சென்னை மணலி இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன்ஸ் கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பசுமைப் பரப்பை மேம்படுத்த திட்டமிடலின்படி, பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் தன்னார்வலர்களால் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி, இந்த நிகழ்ச்சியில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முதன்மை இயக்குநர் தீபக் ஸ்ரீவஸ்தாவா, இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன்ஸ் கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அரவிந்த் குமார், துணை தலைவர் ஏ.சி.சரவணன் மற்றும் மணலி தொழில் சங்கங்களின் செயலாளர் பிரேமபிரியன் ஆகியோர் கலந்து கொண்டு காடுகளின் பரப்பை மேம்படுத்தும் விதமாக 500 மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பசுமை தமிழகம் திட்டத்தின் இயக்குநர் தீபக் ஸ்ரீவாஸ்வா கூறியிருப்பதாவது: பசுமை தமிழகம் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக தமிழகத்தின் காடுகளை தேசிய வனக்கொள்கையின் இலக்கை அடைய கொண்டு வர வேண்டும் என்பதே. அதன்படி, காடுகள் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரிக்கும் செயல்பாடுகளில் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்வர வேண்டும். மேலும், பசுமை தமிழகம் திட்டம் மூலம் பல வழிகளில் மக்களிடம் இதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதனை தொடர்ந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
