×

சர்வதேச மனித உரிமைகள் நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச மனித உரிமைகள் நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: அனைவரும் மனசாட்சியுடனும், சகோதர மனப்பான்மையுடனும் செயல்படவேண்டும் என்ற நோக்கில் ‘சர்வதேச மனித உரிமைகள் நாள்’ ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், 1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதிலிருந்து, மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் பல நாடுகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. இதன் அடிப்படையில், மக்களின் விடுதலை, சுயமரியாதை மற்றும் மனித நேயத்தை முழுமையாக அனுபவிப்பதைத் தடுக்கும் தடைகள் அகற்றப்பட்டுள்ளன. பல நாடுகளில் இனவெறிச் சட்டங்கள் அகற்றப்பட்டுவிட்டன.

பெண்களை இரண்டாம் தர நிலைக்கு தள்ளும் சட்ட மற்றும் சமூக நடைமுறைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. மேலும், சிறுபான்மையினர் தங்கள் மத நம்பிக்கையை எந்தவித அச்ச உணர்வுமின்றி கடைபிடிக்க வழி ஏற்பட்டுள்ளது. கடந்த 1948ம் ஆண்டு ஐநா பொதுச்சபை பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதில் இந்தியாவின் பங்கு மகத்தானது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டமானது கடந்த 1993ம் ஆண்டு செப். 28ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதில் சட்டப்பிரிவு 3, 21-ன் கீழ் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒன்றியத்திலும், மாநில மனித உரிமைகள் ஆணையம் மாநிலத்திலும் நிறுவப்பட்டன. அந்தவகையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட பல மாநிலங்களில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

தமிழகத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் கடந்த 1997ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. முதல் ஆண்டிலேயே 2,162 புகார்கள் இந்த ஆணையத்தால் பெறப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டது. இதுவரை பெறப்பட்ட 2,45,688 புகார்களில் 2,06,762 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 1993ம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டம், மனித உரிமைகள் கல்வி, உளவியல் மற்றும் குற்றவியல் ஆகியவற்றை பாடமாகப் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ‘நிலையப் பயிற்சி’ வழங்கப்படுகிறது. மேலும் கல்லூரி மாணவர்கள் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஆணையத்தின் செயல்பாட்டைப் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கும் ஊக்குவிக்கப்படுவது பாராட்டுக்குரியது.

Tags : Chief Minister ,M. K. Stalin ,International Human Rights Day , Greetings from Chief Minister M. K. Stalin on International Human Rights Day
× RELATED நாட்டில் அடுத்து அமையவுள்ள நமது அரசு...