×

மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: என்ஐஏவிடம் ஒப்படைக்க கர்நாடகா முடிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். அந்த ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில், முகமது ஷரீக், தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டது, போலி ஆதார் அட்டை மூலம் சிம் கார்டு வாங்கியது, ஷிமோகாவில் குண்டை வெடிக்க செய்து ஒத்திகையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 தனிப்படை அமைத்து மைசூரு, ஷிமோகா, தமிழகத்தில் கோவை, நாகர்கோவில், கேரளாவில் கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, கர்நாடக டிஜிபி பிரவீன் சூட், மங்களூரு மாநகர எஸ்பி சசிகுமார் உள்ளிட்டோர் நேற்று மங்களூருவில் குண்டுவெடித்த நகோரி சாலையில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் அரக ஞானேந்திரா, இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பூஜாரியை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், ‘ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயலால் ஈர்க்கப்பட்ட முகமது ஷரீக் கடந்த சில ஆண்டுகளாக சதி செயலை அரங்கேற்றும் எண்ணத்துடன் செயல்பட்டுள்ளார். மங்களூரு போலீசார், கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இவ்வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படும்’ என்றார்.

Tags : Karnataka ,NIA , Mangalore blast case: Karnataka decides to hand over to NIA
× RELATED எல்லை விவகாரம் மகாராஷ்டிரா அமைச்சர்கள் கர்நாடகா வர தடை