×

வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சென்னையில் போதைப் பொருள் விற்ற நைஜீரிய இளம்பெண் கைது: ரூ.2.60 லட்சம், 72 கொக்கைன் பாக்கெட், செல்போன் பறிமுதல்

துரைப்பாக்கம்: சென்னையில் போதைப் பொருள் விற்ற நைஜீரிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.2.60 லட்சம், 72 கொக்கைன் பாக்கெட், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தாம்பரம் மாநகர பகுதிகள் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பள்ளிக்கரணை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையில் தனிப்படையினர் கானத்தூர் சுங்கச்சாவடி அருகே நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வெளிநாட்டு பெண் ஒருவர் ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக வந்து இறங்கி, அங்கிருந்த நபரிடம் ஒரு சிறிய பொட்டலத்தை கொடுத்தார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண்ணை மடக்கி, பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அப்பெண் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஆன்யனி மோனிகா (30) என்பதும், கடந்த 9 மாதங்களாக வேளச்சேரி கோதாவரி தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி, சென்னை மற்றும் புறநகரில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். மேலும், தனது சகோதரியின் புற்றுநோய் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடன் வந்தததும், அவர் சிகிச்சை முடிந்து நைஜீரியா சென்றதும், வேலை இல்லாததால் சென்னை வந்து தங்கி, நைஜீரியாவில் இருந்து வரும் நபரிடம் கொக்கைன் என்ற போதை பொருளை ஒரு கிராம் 2 ஆயிரத்துக்கு வாங்கி ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்ததும்  தெரிய வந்தது.

இதையடுத்து, அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது, ஒரு கிராம் வீதம் என 72 சிறிய கொக்கைன் பாக்கெட் மற்றும் கொக்கைன் விற்ற பணம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கமும், ஒரு செல்போன் இருந்தது.இதையடுத்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கானத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Chennai , Nigerian girl arrested for selling drugs in Chennai by staying in rented house: Rs 2.60 lakh, 72 packets of cocaine, cell phone seized
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...