×

சென்னையில் உள்ள பிஎப்ஐ தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல்

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பிற்கு ஒன்றிய அரசாங்கம் 5 ஆண்டுகள் தடை விதிப்புள்ள நிலையில் அந்த அமைப்பினுடைய தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகத்திற்கு இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர். டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தன.

அப்போது அந்த அமைப்புக்கு வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா அடிப்படையில் ரூ.120 கோடி திரட்டப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதையும் புலனாய்வு அமைப்புகள் உறுதிபடுத்தின. இதையடுத்து கடந்த 22-ந்தேதி 15 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஆபரேசன் ஆக்டோபஸ் என்ற பெயரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 93 இடங்களில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களிலும், அதன் நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்த நிலையில் கடந்த 27ம் தேதி இரவு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோதமான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாப்பு லர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான இந்த தடை நடவடிக்கை  உடனடியாக அமலுக்கு வந்தது. ஒன்றிய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமான அரசாணையை கடந்த 29-ம் தேதி வெளியிட்டது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவர கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பு பொது இடங்களில் இயங்குவது சட்டவிரோதம். எனவே இந்த அமைப்பிற்கு தடைவிதிப்பது, அலுவலகங்களுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பி.எப்.ஐ அமைப்பின் மாநில தலைமை அலுவலகத்திற்கு தாசில்தார் சரவனகுமார் முன்னிலையில் காவல்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Tags : BBI ,Chennai , Chennai, BFI, Head Office, Officers, SEAL
× RELATED நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்; தாலி...