×

ஹரிவராசனம் பாடல் நூற்றாண்டு விழா

சென்னை: சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம்  வட தமிழ்நாடு ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கமிட்டி சார்பாக நீதியரசர் வள்ளிநாயகம், ஜெயராம், இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: சபரிமலையில் நடை திறந்து பூஜை நடைபெறும் நாட்களில் இசைக்கப்படும் ஹரிவராசனம் எனும் பாடல் எழுதி நூறாண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது, கேரளாவை சேர்ந்த கோனகத்து ஜானகியம்மா என்பவரால் எழுதப்பட்டது. நூற்றாண்டுகள் நிறைவடைவதையொட்டி, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம்  நாடு முழுவதும் கொண்டாட முடிவெடுத்துள்ளது. அதற்காக கடந்த ஜூன் 11ம் தேதி இளையராஜா தலைமையில் தேசிய விழாக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மாநிலங்கள் வாரியாக ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கமிட்டி அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையில் 100 பேர் கொண்ட வடதமிழ்நாட்டின் விழா கமிட்டி அறிவிக்கப்பட்டது. மேலும் 18 மாதங்கள் தொடர்ந்து ஹரிவராசனம் என்று போற்றப்படும் ஹரிஹராத்மஜ அஷ்டகம் எனும் பாடலின் பெருமைகளை அனைவரும் அறியும் வகையில் பல்வேறு விதமான கருத்தரங்குகள், நாட்டிய போட்டி, கட்டுரைபோட்டிகள் நடத்த திட்டமிடபட்டுள்ளது. மேலும், மாநிலத்தை 4 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தது 10 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் குழு வந்தனம், ஐயப்ப குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். 2 மணி நேரத்தில் 12 ஆயிரம் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.


Tags : Harivarasanam , Harivarasanam song centenary
× RELATED ஹரிவராசனம் பாடல் நூற்றாண்டு விழா