×

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீடு அடுத்த மாதம் வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் 29 லட்சம் ஏக்கரில் பதிவு செய்த 18.53 லட்சம் விவசாயிகளுக்கு  இழப்பீட்டு தொகை ரூ.481 கோடி அக்டோபர் முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகளுடன் சென்னையில் நேற்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை ஆணையர் எஸ்.நடராஜன், வேளாண்மை துறை இயக்குநர் அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:  வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள விதை, உரம் மற்றும் பூச்சி மருந்து போதுமான அளவு இருப்பில் உள்ளது. விதைகளை பொறுத்தவரை நெல், சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள், பருத்தி விதைகள் 53,182 மெட்ரிக் டன் இருப்பில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில அளவில் யூரியா, டிஏபி, பொட்டாஷ், கலப்பு உரம் ஆகிய உரங்கள் அடங்கிய உரத்தேவை 2,15,850 மெட்ரிக் டன். தற்போது நிறுவனங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கையிருப்பை சேர்த்து 3,28,030 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது.

ஒன்றிய அரசின் ஒதுக்கீடு மற்றும் மாதாந்திர விநியோக திட்டத்தின்படி தேயைான உரங்கள், உர உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்று இருப்பு வைக்கப்பட்டு உரிய காலத்தில் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் 29 லட்சம் ஏக்கரில் பதிவு செய்த 18.53 லட்சம் விவசாயிகளுக்கு உத்தேச இழப்பீட்டு தொகை ரூ.481 கோடி அக்டோபர் முதல் வாரத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் 40 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவு காப்பீடு செய்யவும், 26 லட்சம் விவசாயிகளை பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Rs 481 crore compensation to farmers registered under crop insurance scheme next month: Ministerial announcement
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...