×

குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை ஆன்லைனில் பரப்பும் விவகாரம் நாடு முழுவதும் 59 இடங்களில் சிபிஐ சோதனை: ‘ஆபரேஷன் மேக் சக்ரா’ என்ற பெயரில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் அதிரடி

புதுடெல்லி: சிறுவர்கள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வது, இணையதளங்களில் பகிர்வது தொடர்பாக நாடு முழுவதும் 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 59 இடங்களில் ‘ஆபரேஷன் மேக் சக்ரா’ என்ற பெயரில் சிபிஐ நேற்று அதிரடி சோதனை நடத்தியது. இதில், 50க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வன்முறைகள் மற்றும்  இளம்பெண்களை கூட்டு பலாத்காரம் செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, போக்சோ சட்டமும் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி, சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, கைது நடவடிக்கை எடுத்தாலும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்க, பல்வேறு இணையதளங்களில் உள்ள குழந்தைகள், சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்கள்தான் காரணம் என்பது தெரியவந்தது.

இந்த ஆபாச படங்களுக்கு உலகம் முழுவதும் கடும் தட்டுப்பாடு உள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் சிறுமிகள், குழந்தைகளை வைத்து ஆபாசமாக படம் எடுத்து, அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை விற்று லட்சங்கள் முதல் கோடிக்கணக்கான ரூபாயை பல கும்பல்கள் சம்பாதித்து வருகின்றன. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஒன்றிய, மாநில அரசுகள் பல முக்கிய ஆபாச வலைதளங்களுக்கு தடை விதித்தன. குறிப்பாக, சிறார் ஆபாச வலைதளங்கள் அதிகளவில் முடக்கப்பட்டன. மேலும், சிறார் ஆபாசப் படங்களை ஆன்லைனில் பதிவிடுபவர்கள், பார்ப்பவர்கள், அதை பகிர்பவர்கள், பதவிறக்கம் செய்பவர்கள் என அனைவரின் மீதும் காவல்துறையும், ஒன்றிய புலனாய்வு அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கடந்தாண்டு நம்பவரில் ‘ஆபரேஷன் கார்பன்’ என பெயரில் ஒன்றிய அரசு அதிரடி சோதனைகள் நடத்தி நூற்றுக்கணக்கானோரை கைது செய்தது. தமிழகத்திலும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, இணையதளங்களில் சிறார் ஆபாச படங்களை பதிவிடுவோர், பகிர்வோர், பதிவிறக்கம் செய்வோரை சிபிஐ சிறப்பு விசாரணை பிரிவினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த சிறார்களின் ஆபாச படங்கள் இணையதளத்தில் பதிவிட்டுள்ளதாக சிங்கப்பூரில் உள்ள இன்டர்போல் பிரிவு சிபிஐ.க்கு தகவல் அளித்தது.

இது தொடர்பாக இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சிபிஐ, ‘ஆபரேஷன் மேக் சக்ரா’ என்ற பெயரில் தமிழகத்தில் சென்னை, கடலூர், திண்டுக்கல் உட்பட 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 59 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தியது. இதுகுறித்து சிபிஐ நேற்று வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பதிவிறக்கம், பகிர்தல் தொடர்பாக ‘ஆபரேஷன் மெகா சக்ரா என்ற பெயரில்’ 21 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 59 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சிங்கப்பூரின் இன்டர்போலில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (சிஏசி) பிரிவு மற்றும் நியூசிலாந்தின் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம்
இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஐடி சட்டத்தின் கீழ் சிபிஐ 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

கிளவுட் அடிப்படையிலான சேமிப்பகத்தைப் பயன்படுத்தி சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை புழக்கத்தில் விடுவது, பதிவிறக்கம், பரிமாற்றம் செய்வதில் பல இந்தியக் குடிமக்கள் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களின் செல்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சைபர் தடயவியல் கருவிகளைப் பயன்படுத்தி இந்த மின்னணு சாதனங்களை ஆய்வு செய்ததில், அதிகளவு குழந்தைகள் பாலியல் வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் துஷ்பிரயோகம் செய்பவர்களையும் அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சோதனை நடந்த இடங்கள்
1. உத்தரகாண்ட்    டேராடூன்
2. குஜராத்     கச், ராஜ்கோட், லுனாவாடா, கோத்ரா
3. உத்தர பிரதேசம்     காசியாபாத், ஹத்ராஸ், மகாராஜ்கன்  
4. மேற்கு வங்கம்    முர்சிதாபாத், பர்த்மான்   
5. மகாராஷ்டிரா    மும்பை, புனே, நாசிக், தானே, நாந்தேட், சோலாப்பூர், கோலாப்பூர், நாக்பூர்
6. ஜார்கண்ட்     ராஞ்சி, தன்பாத்  
7. ஆந்திரா    சித்தூர்,  கிருஷ்ணா
8. கர்நாடகா     ராம் நகர், கோலார், பெங்களூரு, குடகு
9. அரியானா     பரிதாபாத்
10. சட்டீஸ்கர்     ராய்பூர்
11. கேரளா    செலக்கரா, மல்லாபுரம்  
12. தமிழ்நாடு     சென்னை, திண்டுக்கல், கடலூர்
13. பஞ்சாப்     குர்தாஸ்பூர், ஹோசியார்பூர்
14. தெலங்கானா    ஐதராபாத்
15. ராஜஸ்தான்     அஜ்மீர்; ஜெய்ப்பூர்
16. அசாம்    கவுகாத்தி, திமாஜி
17. அருணாச்சல்     இடாநகர்
18. பீகார்     அரன், பாகல்பூர்
19. திரிபுரா     அகர்தலா
20. இமாச்சல்      மண்டி
21. கோவா, டெல்லி யூனியன் பிரதேசம்

Tags : CBI ,Make Chakra ,Tamil Nadu , CBI raids 59 locations across the country for child pornography online: 'Operation Make Chakra' action in 21 states including Tamil Nadu
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...