×

தர்மபுரியில் மாடியில் இருந்து பீரோவை இறக்கிய போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி: மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை

தர்மபுரி: தர்மபுரி டவுன் சந்தைப்பேட்டை ரோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் இலியாஸ் பாஷா(75). இவர் கோல்டன் தெருவில் சொந்தமாக வீடு கட்டி, நேற்று முன்தினம் குடும்பத்தோடு குடி புகுந்தார். இதையடுத்து, 2வது மாடியில் இருந்த வாடகை வீட்டில் இருந்து இலியாஸ் பாஷா, தர்மபுரி ஆத்துமேட்டைச் சேர்ந்த டிரைவர் கோபி (23), கிளீனர் குமார் (20) வீட்டு உரிமையாளர் அன்னசாகரத்தைச் சேர்ந்த பச்சியப்பன்(50) ஆகியோர் பொருட்களை இறக்கி, மினிலாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். குறுகலான மாடிப்படி வழியாக இரும்பு பீரோவை இறக்க முடியாததால், வீட்டின் பால்கனி வழியாக கயிறு கட்டி பீரோவை கீழே இறக்கியுள்ளனர்.

அப்போது, அவ்வழியாக சென்ற மின்கம்பியில் பீரோ உரசியது. இதில், பீரோவில் மின்சாரம் பாய்ந்து, அதனை பிடித்துக்கொண்டிருந்தவர்களையும் தாக்கியது. இதில் இலியாஸ் பாஷா, டிரைவர் கோபி ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். பச்சியப்பன், குமார் ஆகியோர் படுகாயத்துடன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், வழியிலேயே பச்சியப்பனும் உயிரிழந்தார். குமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dharmapuri , 3 killed in Dharmapuri, electrocuted while lowering biro from floor: 1 more in intensive care
× RELATED தர்மபுரி கலெக்டர் ஆபிசில் மூதாட்டி உள்பட 2 பெண்கள் தர்ணா