×

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு: சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைந்து கட்சி விதிகளின்படி பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும்  என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவர் வகித்த பதவியும் கலைக்கப்பட்டுவிட்டது. அதிமுகவின் பெரும்பான்மையினர் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சியின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க எந்த அதிகார வரம்பும் இல்லை.

இந்த தீர்ப்பு கட்சி செயல்பாட்டில் மட்டுமல்லாமல் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தில் தலையிடுவதாக உள்ளது. கட்சி ஒற்றைத் தலைமையை நோக்கி செல்லும் நிலையில் இரட்டை தலைமை வேண்டும் என்ற ஒரு தனிநபரின் விருப்பத்தை பிரசாரம் செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. உட்கட்சி செயல்பாடு குறித்து நீதிபதி சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இது நீதிமன்றம் ஆய்வுக்குட்பட்டது அல்ல. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில், ஜூன் 23ம் தேதிக்கு முன் உள்ள நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார். இது மனுவில் கேட்கப்படாத கோரிக்கை. இதற்காகவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.  

ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் 2,460 உறுப்பினர்கள் கலந்து கொண்டது குறித்து எழுத்துப்பூர்வமான நோட்டீஸ் அளிக்க வேண்டி தேவையில்லை என்பது கட்சி விதி. கட்சியில் பொதுக்குழுவிற்கே அனைத்து அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பணியாற்ற முடியாத நிலை உள்ளது என்பதை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார். ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு சட்டப்படி ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. அந்த வழக்கு ஏற்கனவே செல்லாததாகிவிட்டது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சிக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளில் கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர். ஒற்றைத் தலைமை வேண்டும் என்று திடீரென்று முடிவெடுக்கவில்லை. இருவரும் இணைந்து செயல்பட முடியாத ஒரு நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு  மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

* ஓபிஎஸ் தரப்பினர் கேவியட் மனு
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலைய தொடரும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் நிலையில், எங்களை கேட்காமல் எந்த உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Edappadi Palaniswami ,AIADMK General Committee ,Madras High ,Court , Edappadi Palaniswami's appeal against AIADMK General Committee's decision to invalidate: Hearing in Madras High Court on Monday
× RELATED தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம்...