×

பொறியியல் படிப்புகளில் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு: 20ம் தேதி சிறப்பு பிரிவுக்கும், 25ம் தேதி முதல் பொதுப் பிரிவுக்கும் கவுன்சிலிங்

சென்னை: தமிழக பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது. வரும் 20ம் தேதி சிறப்பு பிரிவுக்கும், 25ம் தேதியிலிருந்து பொதுப் பிரிவுக்கும் கவுன்சிலிங் துவங்க உள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.இ., மற்றும் பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு தமிழக அரசின் சார்பில் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்று, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு, 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு தரவரிசையை இறுதி செய்வதற்கான ரேண்டம் எண், கடந்த 2ம் தேதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. மதிப்பெண் அடிப்படையிலான பொது தரவரிசையும், தமிழக அரசின், 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி ஜாதி வாரியான தரவரிசையும் பட்டியலில் இடம் பெறும்.

இந்த தரவரிசை அடிப்படையில்தான், ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். இதன்படி முதற்கட்ட ஆன்லைன் கவுன்சிலிங் வரும் 20ம் தேதி துவங்க உள்ளது. இதில் விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிலும், முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கப்படும். இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் 7.5 சதவீதத்துக்கு, 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ‘சாய்ஸ் பில்லிங்’ என்ற ஆன்லைன் விருப்பப்பதிவு முறையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். முதற்கட்ட கவுன்சிலிங் 23ம் தேதி முடிகிறது. இதையடுத்து தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ளிட்ட மற்ற அனைத்து வகை மாணவர்களுக்கும் வரும் 25ம் தேதி பொது கவுன்சிலிங் துவங்க உள்ளது.

மொத்தம் நான்கு சுற்றுகளாக, அக்., 21 வரை பொது கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. அக்.,22 மற்றும், 23ம் தேதிகளில் துணை கவுன்சிலிங் நடக்கும். அதற்கான விண்ணப்பங்கள் தனியே பெறப்படும். மேலும், பொது கவுன்சிலிங்கில் நிரம்பாமல் காலியாக இருக்கும், அருந்ததியர் பிரிவு இடங்களை, மற்ற பட்டியலினத்தவருக்கு மாற்றி ஒதுக்கும் கவுன்சிலிங், அக்.,24ம் தேதி நடக்கிறது. இதனுடன் இந்த ஆண்டுக்கான முதல் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் நிறைவு பெற உள்ளது. இந்த ஆண்டு, 430 இன்ஜினியரிங் கல்லூரிகளில் இரண்டு லட்சம் வரையிலான அரசு ஒதுக்கீட்டு இடங்களும், சில கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுடன், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் சேர்த்து ஆன்லைன் கவுன்சிலிங்கில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான புள்ளி விபரங்கள் நாளை வெளியிடப்படும்.

மொத்தம் எத்தனை மாணவர்கள், தரவரிசைக்கு தகுதி பெற்றுள்ளனர்; நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை; அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்லூரிகள் எத்தனை; அங்கீகாரம் இழந்த கல்லூரிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் எத்தனை; அரசு பள்ளியின், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான இடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள், நாளை இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியால் வெளியிடப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக முன்கூட்டியே வைப்பு தொகை செலுத்த வேண்டாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இட ஒதுக்கீடு ஆணை கைக்கு வந்த ஏழு நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில், அசல் சான்றிதழ்களை அளித்து சேர்க்கையை உறுதி செய்து கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களை பதிவு செய்து, அந்த இடங்கள் நிரம்பிவிட்டதாக கவுன்சிலிங் குழுவிடம் கல்லூரிகள் தெரிவிக்கும். இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் ஒரு வாரத்தில் கல்லூரியில் சேராவிட்டால், அந்த இடங்கள் காலி இடங்களாக கருதப்பட்டு, அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இதனால், முதல் சுற்றில் ஒதுக்கீடு பெற்ற மாணவர், மீண்டும் தனக்கு கிடைத்த இடத்தில் சேரவும் முடியாது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் மீண்டும் பங்கேற்கவும் முடியாது என்ற கட்டுப்பாடு இந்த ஆண்டு அமலுக்கு வருகிறது.

Tags : Admission rank list for engineering courses to be released tomorrow: Counseling from 20th for special category and from 25th for general category
× RELATED 2ம் கட்ட மக்களவை தேர்தல்: அதிக...