×

2ம் கட்ட மக்களவை தேர்தல்: அதிக வாக்குப்பதிவு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது; பிரதமர் மோடி பதிவு

டெல்லி: இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.இந்த நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் தொடங்கியது. அந்த வகையில் கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மராட்டியம் (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஷ்கார் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

2ம் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய பிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. எனவே மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் ஆங்கிலம், இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.அந்தப் பதிவில் “இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரையும் சாதனை எண்ணிக்கையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதிக வாக்குப்பதிவு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வாக்கு உங்கள் குரல்” என்று தெரிவித்து உள்ளார்.

The post 2ம் கட்ட மக்களவை தேர்தல்: அதிக வாக்குப்பதிவு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது; பிரதமர் மோடி பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,PM Modi ,Delhi ,Indian parliamentary elections ,Tamil Nadu ,2nd Lok Sabha Election ,
× RELATED மக்களவை தேர்தல்: வெளிநாடுகளை சேர்ந்த 18...