×

திருப்பத்தூர் அருகே பரபரப்பு; ஜலகாம்பாறை பகுதியில் இருந்து மரம் வெட்டி கடத்தல்: கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறை காப்பு காட்டில் இருந்து மரங்கள் வெட்டி கடத்தப்படுகிறது. இயற்கை வளங்கள் நாசமாகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். நீர்வீழ்ச்சி பின்புறம் ஏலகிரி மலையின் காப்புக்காடு பகுதி உள்ளது. இந்த காப்புக்காடு பகுதி அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

 இந்த பகுதியில் பல்வேறு வகையான காட்டுமரங்கள், தேக்கு மரங்கள், சந்தன மரங்கள் உள்ளிட்டவைகள் இருந்து வருகிறது. திருப்பத்தூர் என்றாலே சந்தன மாநகரம் என பெயர் பெற்ற நகரமாகும். ஏனென்றால் ஏலகிரி மலை, ஜவ்வாது மலை காப்பு காட்டு பகுதிகளில் அதிக அளவில் சந்தனம் மரங்கள் இருந்த பகுதியாகும். இந்த மலையில் இருக்கும் சந்தனம் மரம் மிகவும் தரம் வாய்ந்த சந்தனமாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தன கடத்தல் கும்பலால் ஜவ்வாது மலை, ஏலகிரி மலை பகுதியில் இருந்த சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு தற்போது சந்தன வாசம் கூட இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியால் ஒரு லட்சம் மரம் நட்டு தற்போது அது மரமாக உள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து சமூக விரோத கும்பல்கள் அங்கிருந்து மரங்களை வெட்டி கடத்தப்பட்டு தங்களின்  சுய லாபத்திற்காக பயன் அடைந்து வருகின்றனர். மேலும் காட்டுப்பகுதியில் இருந்து பகல் இரவு நேரங்களில் வனத்துறைக்குட்பட்ட எல்லை சோதனை சாவடியை மீறி மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர்.

 இதனை தடுக்க வனத்துறை அதிகாரிகளும் காவல்துறையும் முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் தொடர்ந்து மரங்கள் வெட்டி கடத்தப்பட்டால் ஜலகாம்பாறை காட்டுப்பகுதி முற்றிலுமாக அழிந்து நாசமாகிவிடும். இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலை உள்ளிட்டவை அனைத்தும் வெறிச்சோடி காணப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Tags : Bustle ,Tirupattur ,Jalakamparai , Bustle near Tirupattur; Logging and smuggling from Jalakambarai area: Forest officials oblivious
× RELATED பூதப்பாண்டி அருகே பரபரப்பு; மாட்டு கொட்டகையில் திடீர் தீ: பசு படுகாயம்