×

கவலை எதுக்கு... கிரெடிட் கார்டு இருக்கு... ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் கிரெடிட் கார்டை உரசிய மக்கள்; பரிவர்த்தனையில் புது உச்சம்

மும்பை: கடந்த மே மாதத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக, கிரெடிட் கார்டு மூலம் ரூ.1.1 லட்சம் கோடிக்கு மேல் பரிவர்த்தனை நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மே மாதத்துக்கான கிரெடிட் கார்டு பரிவர்த்தனை விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில், ‘கடந்த மே மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,14,000 கோடி அளவுக்கு பரிவர்த்தனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முந்தைய மாதத்தை விட 8 சதவீதமும், கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 118 சதவீதமும் அதிகமாகும்’ என குறிப்பிட்டுள்ளது. சமீப காலமாகவே டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகம். பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகுதான் யுபிஐ பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், தற்போது மிக அதிக அளவில் இது பயன்படுத்தப்படுகிறது.

இதன்மூலம், வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் அனுப்பலாம். நடந்து முடிந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டத்தில், கிரெடிட் கார்டையும் யுபிஐயில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரூபே கார்டுகள் இதில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் அதிகரிப்பு குறித்து ஆய்வு நடத்திய நிதிச்சேவைகள் நிறுவனம் ஒன்று, கடந்த 3 ஆண்டுகளில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை 23 சதவீத வருடாந்திர கூட்டு வளர்ச்சியை அடைந்திருக்கிறது என தெரிவித்துள்ளது.   இதுபோல், ஒரு கார்டுக்கான மாதாந்திர சராசரி பயன்பாடு 5 சதவீதம் அதிகரித்து ரூ.14,800 ஆக உள்ளது. இது கொரோனாவுக்கு முன்பிருந்ததை விட அதிகம் என தெரிவித்துள்ளது இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: மக்களிடையே பயணங்கள் அதிகரிப்பு, கார்டு பரிவர்த்தனைக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பயணங்கள் இல்லை. இதனால் கார்டு பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது பயணங்கள் அதிகரித்திருப்பதும், பயண கட்டணங்கள் உயர்ந்திருப்பதும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளன. இதுபோல் மால்கள், கடைகளிலும் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங்கில்தான் கார்டு மூலம் பணத்தை செலுத்துவது அதிகமாக உள்ளது. அதாவது, மேற்கண்ட பரிவர்த்தனையில் கார்டு மூலம் ரூ.71,429 கோடியும், கடைகள், மால்களில் ரூ.42,266 கோடியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல், ஏப்ரலில் ஆன்லைன் மூலம் ரூ.65,652 கோடியும், ஆன்லைன் மூலம் ரூ.39,806 கோடியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்திய ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களின்படி, கிரெடிட் கார்டு பரிவர்த்தனை அபரிமிதமாக அதிகரித்திருப்பதோடு, புதிய உச்சத்தை தொட்டுள்ளது கவனிக்கத்தக்க அம்சமாகும். ஏனெனில், பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அடையாளமாகவும் இதை குறிப்பிடலாம். அதேநேரத்தில், கிரெடிட் கார்டு பயன்படுத்தி விட்டு பணத்தை திரும்ப செலுத்த தவறியவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை, 3 ஆண்டில் குறைந்த பட்ச அளவாகவே உள்ளது. ஆனால், வட்டி விகிதம் இன்னும் 3 காலாண்டுகளுக்கு உயரும் என்பதால், கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கான தற்போதைய டிரெண்ட் தொடருமான  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கிரெடிட் கார்டு பில்லை திருப்பி செலுத்த முடியாவிட்டால், மக்களிடையே நிதி நெருக்கடி ஏற்பட்டதற்கான அடையாளமாக இருக்கும்.

Tags : Why worry ... Have a credit card ... People who borrow more than Rs 1 lakh crore; New peak in transaction
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...