×

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மீதான அவதூறு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் புகழேந்தி மேல்முறையீடு

புதுடெல்லி: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைகோரி புகழேந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில அதிமுக செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் புகழேந்தி. இவரை கட்சி கட்டுப்பாடுகளை  மீறியதாக கூறி கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் இருந்து நீக்கி அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி  பழனிசாமி ஆகியோர் ஒருமித்து உத்தரவிட்டிருந்தனர்.

இதை எதிர்த்து புகழேந்தி சென்னையில் உள்ள எம்பி,  எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்சுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து  இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பு சென்னை  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதனை விசாரித்த  நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பின் வாதங்களை  ஏற்பதாகவும், நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி தலைமைக்கு முழு அதிகாரம்  இருப்பதாகவும் தெரிவித்தது. மேலும் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் புகழேந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதில், ”ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் மீது எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்த  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் இருந்து  திரும்பப்பெற வேண்டும், அதுவரையில் இரண்டுக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இந்திய தலைமை தேர்தல்  ஆணையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : US ,Supreme Court , OBS, EPS, Defamation Case, Supreme Court, Pukhalendi Appeal
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இடம்...