×

ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை பின்வாங்கினார் எடப்பாடி: தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியும் முடிவை வெளியிடாமல் நழுவல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கவும், அவரது பொருளாளர் பதவியை பறிக்கவும் கட்சி அலுவலகத்தில் அவசர அவசரமாக தலைமைக்கழக நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, அதற்கான அறிவிப்புகளை வெளியிடாமல் திடீரென பின்வாங்கினார். இது, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த வானகரத்தில் கடந்த 23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. இந்த கூட்டத்தில் தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை மாற்றி ஒற்றைத் தலைமை (பொதுச்செயலாளர்) பதவியை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். இதற்கான ஏற்பாட்டின் பேரில், பொதுக்குழு நிர்வாகிகளில் மொத்தமுள்ள 2,600 பேரில் 2,190 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஆதரிக்க தயார் நிலையில் வந்திருந்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்று பொதுக்குழு கூட்டம் நடப்பதற்கு முன்பே பகிரங்கமாக கூறி வந்தனர். மேலும், எடப்பாடியின் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

நீதிமன்றத்திலும் எடப்பாடி முயற்சிக்கு ஓபிஎஸ் தரப்பினர் தடை வாங்கினர். இந்நிலையில், பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தது. பொதுக்குழுவுக்கு வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கட்சியின் பொதுக்குழு நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இந்நிலையில், பொதுக்குழு தீர்மானத்தில் கொண்டு வரப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மேடையிலேயே அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ், வைத்திலிங்கம்உள்ளிட்ட ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது, பொதுக்குழுவில் கூடி இருந்த நிர்வாகிகள் ‘ஓபிஎஸ் ஒழிக, துரோகி’ என்று கோஷம் எழுப்பினர்.

மேலும் பொதுக்குழு மேடையிலேயே ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும். அதில், ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,  அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகி விட்டது. இனி ஓபிஎஸ் பொருளாளர் மட்டுமே. எடப்பாடி, தலைமை நிலைய செயலாளராக தொடர்வார் என்று சி.வி.சண்முகம் அறிவித்தார். இதனால் ஓபிஎஸ் அணியினர் மேலும் அதிருப்தி அடைந்தனர். எனவே, எடப்பாடி அணியினரின் செயல்களுக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களை சந்திக்க ஓபிஎஸ் 2 நாட்களுக்கு முன் புறப்பட்டார். இன்னொரு பக்கம் அதிமுக பொதுச்செயலாளர் என்ற அடைமொழியுடன் சசிகலாவும் புரட்சி பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்று முன்தினம் இரவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக தலைமை கழகம், தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியானது. வழக்கமாக ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்துடன் இதுபோன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும். ஆனால், இருவரது கையெழுத்தும் இல்லாமல் நேற்று இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு ஓபிஎஸ் தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘‘அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது கையெழுத்து இல்லாமல் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் எதுவும் செல்லாது’’ என கூறியிருந்தார். இந்நிலையில், ஓபிஎஸ் தேனி மாவட்டத்தில், அதிமுக நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலோசனை நடத்தினார். ஆனாலும் திட்டமிட்டபடி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, கோகுலஇந்திரா, பொன்னையன் உள்ளிட்ட 65 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று கலந்து கொள்ளவில்லை. 5 பேர் மட்டுமே வரவில்லை.

இந்த கூட்டத்தில், கடந்த 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டபடி வருகிற ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்த வேண்டும். தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகி உள்ளதால், கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் எண்ணம்படி ஒற்றைத் தலைமை பதவியை கொண்டு வர வேண்டும். அதன்படி, பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் வரை தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை கூட்டத்தில் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இனி கட்சி சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே கையெழுத்து போட்டு வெளியிடப்படும்.

அதேபோன்று, கட்சி கட்டுப்பாட்டை மீறி ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருவதால், அவரை அதிமுக கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என நேற்றைய கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்சை தூக்கினால் என்னென்ன சட்டப் பிரச்னைகள் வரும், அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறும்போது, “கூட்டத்தில் பல பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல்களை நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஓபிஎஸ் கட்சிக்கு நிறைய துரோகங்கள் செய்துள்ளார். கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகி உள்ளது. ஓபிஎஸ்சிடம் உள்ள பொருளாளர் பதவி குறித்து பொதுக்குழு கூட்டத்தில்தான் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். கட்சியை வழிநடத்தி செல்ல எடப்பாடிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்றார். இதில் இருந்தே நேற்று நடந்த கூட்டத்தில், ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அடுத்து, எடப்பாடியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய நேற்று நடந்த கூட்டத்திலேயே பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென்று அதுபோன்ற அறிக்கை எதுவும் அளிக்காமல் விட்டு விட்டனர். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கூறும்போது, எல்லாம் தயார் நிலையில்தான் இருந்தது. ஆனால், திடீரென்று தலைமை பின்வாங்கி விட்டது. சட்டப்போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை நோக்கித்தான் ஓ.பன்னீர்செல்வம் செல்கிறார். இதனால் இந்த நேரத்தில் அவர் சட்டப்போராட்டம் நடத்த நாமே எடுத்துக் கொடுப்பதுபோல, அடுத்தடுத்து சட்டச் சிக்கல்களை நாமே உருவாக்க வேண்டாம். நாம் சட்டப்படி, விதிப்படி செல்ல வேண்டும்.

அவர் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுக்க வேண்டாம் என்று பின்வாக்கி விட்டார். இது எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது உள்ள நிலைமையில் சட்டப் போராட்டம் நடத்தினால், அது பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவே முடியும் என்று தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை யோசிக்கிறது என்றனர். எப்படியோ இரு நாட்களாக கூடிப்பேசி எந்த முடிவும் எடுக்காமல் கலைந்து சென்றது தொண்டர்களையும் சோர்வடைய வைத்துள்ளது.

* பழைய மண்டபம் தர மறுப்பு இடம்மாறும் அதிமுக பொதுக்குழு
கடந்த 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி ஆதரவாளர்கள் அவமானப்படுத்தி வெளிநடப்பு செய்ய வைத்தனர். அதிகளவில் எடப்பாடி ஆதரவாளர்கள் கூடி சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சி செய்தனர். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த நிலையில், வருகிற ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்த மண்டபம் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது, இதையடுத்து சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) அல்லது பழைய மாமல்லபுரம் சாலை (ஓஎம்ஆர்) பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்த எடப்பாடி அணியினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Edappadi , Edappadi withdraws action against OPS
× RELATED மாணவர்களுக்கு வழங்கப்படும்...