×

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்: அண்ணாமலை பேச்சுக்கு துரை வைகோ பதிலடி

சென்னை: மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை எழுப்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அறையை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு திறந்து வைத்தார். பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் நேற்று, தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

இலங்கை, இந்தியாவை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சூழலில் கச்ச தீவை மீட்க வேண்டியதை சுட்டி காட்டியுள்ளார். பிரதமர் நிகழ்ச்சியில் முதல்வர் அரசியல் பேசி உள்ளதாக அண்ணாமலை கூறிய கருத்து அவதூறானது. 10 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதுரவாயல் பாலம், சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை என ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தந்ததால் எதிர்க்கவில்லை. கடந்த காலங்களில் நீட் போன்ற பிரச்சனைகளில் 19 மாணவர்கள் உயிரிழந்தனர்.

கடந்த முறை நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்னை இருந்தது. அதனால்தான் பிரதமர் வரும் போது எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டினோம். கருப்பு பலூன் பறக்க விட்டோம். தற்போதும், நீட், பெட்ரோல், டீசல் விலை போன்ற பிரச்சினைகளுக்காக ஒன்றிய அரசை எதிர்க்கிறோம். கடந்த ஆட்சியில் சாத்தான்குளம், பொள்ளாச்சி சம்பவம் போன்ற பிரச்னைகளில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் தவறுகள் ஏற்பட்டால் காவல்துறை  நடவடிக்கை எடுக்கிறது.

சட்டம்- ஒழுங்கை சிறப்பான, சரியான முறையில் முதல்வரும், டிஜிபி சைலேந்திரபாபுவும் செயல்படுகின்றனர். தேசிய கல்வி கொள்கையில் அமித்ஷா ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி என தெரிவித்திருந்தார். இந்திய தேசிய கல்வி கொள்கைகளும் அதேதான் கூறியிருக்கிறது. தேசிய கல்வி கொள்கை செயல்பட்டால் ஒன்று மாநில மொழி இருக்கும். மற்றொன்று ஆங்கில மொழி இல்லாமல் இந்தி மொழியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Modi ,Tamil ,Nadu ,K. Stalin ,Durai Vaiko ,Anamalai , Chief Minister MK Stalin is talking about the needs of Tamil Nadu at the event attended by Prime Minister Modi: Durai Vaiko retaliates for Annamalai speech
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...