×

இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் ஒளிரும் சூரியனாக திமுக ஆட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சேலம்: இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் ஒளிரும் சூரியனாக திமுக ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் ஆத்தூரில் நடக்கும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை சேலம் அளித்துள்ளது. தொடர்ந்து வெற்றிகளை பெறுவோம் என்ற நம்பிக்கையை இந்த கூட்டம் மெய்ப்பிக்கிறது. இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே 7ம் தேதி ஒளிரும் சூரியனாக திமுக ஆட்சி அமைந்தது. இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

நிதி நெருக்கடியில் இருந்த தமிழ்நாடு இப்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. மேட்டூர் அணை திறப்பின் மூலம் 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு மிகச் சரியாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மே மாதத்தில் மேட்டூர் அணை திறப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. பாசன கால்வாய்களை சரியாக தூர்வாரியதால் கடைமடை வரை தண்ணீர் பாய்ந்தது. அதிமுக ஆட்சியில் 2020 தவிர ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது இல்லை.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைந்துள்ளது. 10 ஆண்டுகளில் செய்யக்கூடிய சாதனைகளை ஓராண்டில் செய்திருக்கிறோம். தேர்தலுக்கு முன்னாள் மக்களிடம் பெற்ற மனுக்களில் 2.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் திமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. ரூ.2,500 கோடி மதிப்பிலான திருக்கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 7,01,000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளில் 438 கோடி ரூபாய் அளவிற்கு நகைக் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அறநிலையத்துறை சார்பில் 10 கலைக்கல்லூரிகள் உருவாக உள்ளன. ரூ.2,500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளது. உண்மையான ஆன்மிகவாதிகள் திமுகவை ஆதரிக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்தபோது, இதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கும் போது, மாநில வரியும் குறையும்.

2014ல் இருந்த நிலைக்கு மீண்டும் பெட்ரோல், டீசல் மீதான வரியை கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் குறைக்க வேண்டும். 3 மடங்குக்கு மேல் உயர்த்திவிட்டு சிறிதளவு மட்டுமே ஒன்றிய அரசு குறைத்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பொருளாதார நெருக்கடியை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கொடநாடு கொலை ஆகியவை தான் அதிமுக ஆட்சியின் சாதனை எனவும் விமர்சனம் செய்தார்.


Tags : Tamil Nadu ,Chief Minister ,Mukherr K. Stalin , DMK rule as a shining sun in dark Tamil Nadu: Speech by Chief Minister MK Stalin
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...