×

கோவையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 14 டன் மாம்பழம், சாத்துக்குடி பழங்கள் பறிமுதல்: உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கோவை: கோவையில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்கள் மற்றும் 2 டன் சாத்துக்குடி பழங்களை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.கோவையில் ரசாயன பவுடர் பயன்படுத்தி மாம்பழம், சாத்துக்குடி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான உணவுத்துறை அலுவலர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர், கோவை வைசியாள் வீதி, பெரிய கடை வீதி, பவள வீதி-1,2, கருப்ப கவுடர் வீதி ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வில் நேற்று ஈடுபட்டனர். சுமார் 45 கடைகளில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது மாம்பழங்களை பழுக்க வைக்க எத்திலீன் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை நேரடியாக மாம்பழ பெட்டிகளின் உள்ளே வைத்து இருந்தது தெரியவந்தது. இதில், 12 350 கிலோ மாம்பழம், 2350 கிலோ எடையளவு சாத்துக்குடியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். 12 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள், சாத்துக்குடி ஆகியவை மாநகராட்சி உரக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.  இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கார்பைடு கல், எத்திலீன் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உட்கொள்வதால் வயிறு தொடர்பான பிரச்னைகள், கண் எரிச்சல், வாந்தி, பேதி, நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகள், சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்னையும் ஏற்படலாம். இதில், ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற முறையற்ற வகையில் ரசாயனங்கள் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கும் நபர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Coimbatore, 14 tonnes of mangoes, Sathukkudi fruits, confiscated
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...