சென்னை: சட்டப்பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாட்டில் முன்னோடி திட்டமாக சென்னை மாவட்டத்தில் 12-14 வயதுடைய அனைத்து வளரிளம் பெண்களுக்கு ரூ7.15 கோடி செலவில் ஹெச்.பி.வி தடுப்பூசி செலுத்தப்படும் செங்கல்பட்டு, நீலகிரி, மயிலாடுதுறை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, தென்காசி, திருப்பத்தூரில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் ரூ60.17 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். மதுரை, கோவை, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தை பருவ புற்றுநோய் பராமரிப்பு ஏற்படுத்தப்படும். அரசு குருத்தணு பதிவேடு சென்னை அரசு சிறார் நல நிலையம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் இயங்கு வரும் பிரத்யேக ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அலகு சிகிச்சை மையத்தில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ30 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
மரபியல் சார்ந்த நோய்கள், மரபுசார் பிற அரியவகை நோய்களுக்கான மருத்துவத் துறையை மூன்று ஒப்புயர்வு மையங்களாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, மதுரை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்திட முதற்கட்டமாக ரூ8.19 கோடியில் செயல்படுத்தப்படும். 30 மாவட்டங்களில் வட்டார அளவில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வளரிளம் பருவத்தினருக்கான மாதிரி சிகிச்சை மற்றும் மேலாண்மை மையங்கள் ரூ6 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். எழும்பூர் அரசு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு மகளிர் சிறார் மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கட்டமைப்பு உபகரணங்களுடன் ரூ5 கோடி செலவில் கருத்தரிப்பு மையங்கள் நிறுவப்படும். கோவை, மதுரை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண மருத்துவ படுக்கை தொகுதிகள் ரூ3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். கோவை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் ரூ1.92 கோடியில் உருவாக்கப்படும். நீரிழிவு மற்றும் குகால் இழப்புகளை குறைக்கும் திட்டம் ரூ1.05 கோடியில் செயல்படுத்தப்படும். திருநங்கைகள் நலனுக்காக திருநெல்வேலி, வேலுர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆலோசனை பிரிவு ரூ60 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
Tags : Chennai ,Minister , women vaccinated ,HPV,Minister