×

உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்யா தாண்டவம் 423 இடங்களில் குண்டுமழை: போர் விமானம், ஹெலிகாப்டர்கள், 9 ஆயுத கிடங்குகள் அழிப்பு

கீவ்: பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போர், நேற்றுடன் சரியாக 2 மாதங்களை கடந்துள்ளது. பலமிக்க ராணுவம், நவீன ஆயுதங்களை கொண்ட ரஷ்யா, உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட பல முக்கிய நகரங்களை கைப்பற்றுவதில் தோல்வியடைந்தது. உக்ரைனின் பதிலடியால் பல இடங்களில் ரஷ்ய படைகள் பின்வாங்கின. இந்த தோல்வியை ஈடுகட்டுவதற்காக, தலைநகர் கீவ், அதன் புறநகர் பகுதிகளான புச்சா, இதர நகரங்களில் அப்பாவி மக்களை ரஷ்ய வீரர்கள் கொடூரமாக சித்ரவதை, இனப்படுகொலை செய்து குழிதோண்டி புதைத்து உள்ளனர்.  

உக்ரைனில் உள்ள கெர்சனை தவிர எந்த பகுதியையும் ரஷ்யா இதுவரை முழுமையாக கைப்பற்றவில்லை. மரியுபோலை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்த போதிலும், அங்குள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆலையான அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையை கைப்பற்ற தீவிர சண்டை நடந்து வருகிறது. இங்குள்ள பதுங்கி குழியில் 2,000 உக்ரைன் வீரர்கள், ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். முதலில் இந்த தொழிற்சாலையை தரைமட்டமாக்க நினைத்த ரஷ்ய அதிபர் புடின், அங்கு அப்பாவி மக்களும் இருப்பதால் தனது முடிவை மாற்றிக் கொண்டார். ‘தொழிற்சாலையை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்துங்கள். இதில், ஒரு ஈ கூட தப்பக் கூடாது,’ என தனது படைக்கு உத்தரவிட்டார். இதனால், தொழிற்சாலையை சுற்றிவளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏற்கனவே, மரியுபோலில் ரஷ்ய படைகள் 10,000 மக்களை கொன்று புதைக்குழி தோண்டி புதைத்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இங்கு போர் முடிவுக்கு வந்தால், மேலும் பல பயங்கரங்கள் வெளிச்சத்திற்கு வரும் என கருதப்படுகிறது.

பல இடங்களில் ரஷ்யாவின் வான், தரைவழி  தாக்குதல்களை உக்ரைன் முறியடித்து வருகிறது. ரஷ்யா எல்லையில் உக்ரைன்  குண்டு வீசியதில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், உயிர் சேதம் ஏற்படவில்லை  என்றும் ரஷ்ய எல்லைப் பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற, தனது தீவிர தாக்குதலை ரஷ்யா நேற்றும் தொடர்ந்தது. லுஹான்ஸ்கில் உள்ள போபாஸ்னா, சிவெரோடோனெட்ஸ்க், டொனெட்ஸ்கில் உள்ள குராக்கிவ், டான்பாசுக்கு மேற்கே உள்ள டினிப்ரோ, தெற்கில் உள்ள ஒடெசா நகரங்களில் ரஷ்ய படைகள் ஏவுகணை மற்றும் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் குழந்தை உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர்.

மேற்கு நாடுகள் வழங்கிய ஆயுதங்களை கார்கீவ் பிராந்தியத்தில் உள்ள 4 கிடங்குகள் உட்பட 9 கிடங்குகளில் உக்ரைன் அரசு சேமித்து வைத்திருந்தது. இந்த கிடங்குகளின் மீது ரஷ்ய ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 200 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைனின் கார்கீவ் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரைனின் எஸ்யூ-25  போர் விமானம், மூன்று எம்ஐ-8 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட கவச மற்றும் பிற ராணுவ வாகனங்களை அழிக்கப்பட்டுள்ளது. வெடிமருந்து தொழிற்சாலை, பல பீரங்கி கிடங்குகள் என ஒரே இரவில் 423 உக்ரைன் இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன.  ரஷ்ய போர் விமானங்கள், 26 உக்ரைன் ராணுவ இலக்குகளை அழித்துள்ளன,’ என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், போர் தொடங்கி 2 மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி  பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘நான் ஒரு முடிவை எதிர்பார்க்கிறேன். அது பரிசுகள் அல்லது சில வகையான கேக்குகள் அல்ல. குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் ஆயுதங்களை எதிர்ப்பார்க்கிறோம்’ என்றார். அமெரிக்க அதிபர் பைடனுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்த நிலையில், அமெரிக்காவின் இரு அமைச்சர்கள் கீவ் சென்றுள்ளது உலகளவில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

மரணத்தை வெல்லும் போர்: ஈஸ்டர் ஞாயிறை முன்னிட்டு பண்டைய செயின்ட் சோபியா கதீட்ரலில் இருந்து நாட்டு மக்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், ‘இன்றைய விடுமுறையானது மாபெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஒளி இருளை வெல்லும். நன்மை தீமையை வெல்லும். வாழ்க்கை மரணத்தை வெல்லும். உண்மை எந்தப் பொய்யையும் வெல்லும். ரஷ்யா இந்த உண்மைகளை மீண்டும்  கற்றுக்கொள்ள வேண்டும், இது ஒரு காலத்தின் விஷயம் மட்டுமே. நாங்கள் அனைவரும் சூரிய உதயம் விரைவில் வரும் என்று நம்புகிறோம். எனவே, உக்ரைன் நிச்சயமாக வெற்றிபெறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையையும் தருகிறது,’ என்று தெரிவித்தார்.

2 மாதமாக பதுங்கு குழி: மரியுபோலில் இரும்பு தொழிற்சாலை பதுங்கி குழியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடும் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில், குழந்தைகளுக்கு ராணுவ வீரர்கள் இனிப்பு வழங்குகின்றனர்.  அப்போது பேசும் ஒரு பெண், ‘பிப்ரவரி 27 அன்று வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து தானும் தன் உறவினர்களும் வானத்தையோ... சூரியனையோ... பார்க்கவில்லை’ என்று கூறினார்.

ரஷ்ய ராணுவ முகாம் அழிப்பு 2 தளபதிகள் பலி: ரஷ்யா கைப்பற்றிய கெர்சனில் உள்ள ரஷ்ய முகாமை உக்ரைன் அழித்துள்ளது. இங்கு  நடத்தப்பட்ட தாக்குதலில் 2 ஜெனரல்கள் கொல்லப்பட்டனர். மற்றொருவர்  படுகாயமடைந்தார். இதுவரை ரஷ்ய ஜெனரல்கள் 9 பேர் போரில் கொல்லப்பட்டுள்ளனர்  என்று உக்ரைன் ராணுவ புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ரஷ்யா  மறுக்கவில்லை. ஆனால், இந்த இடத்தில் 50 ரஷ்ய வீரர்கள் இருந்ததாக  கூறப்படுகிறது. அவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. சிரியாவிற்கு ராணுவ வீரர்களை ஏற்றிச் செல்லும் ரஷ்ய போர் விமானங்கள், பயணிகள் விமானங்கள், தனது நாட்டு வான்வெளியை பயன்படுத்த துருக்கி அரசு தடை விதித்துள்ளது.

Tags : Russia ,Ukraine , Russia bombs 423 places in Ukraine overnight: warplanes, helicopters, 9 arsenals destroyed
× RELATED மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு: ரஷ்யாவின் ராணுவ தளபதி உயிரிழப்பு