மொடக்குறிச்சி : எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கேட்டு திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை தேங்காய் ஏலமும், திங்கட்கிழமை தேங்காய் பருப்பு ஏலமும் நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கரூர், திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது விளை பொருட்களை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர்.இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 70க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 2020 முதல் 2023 செப்டம்பர் மாதம் வரை கூலி நிர்ணயம் செய்து அதன்படி மூட்டைக்கு கூலி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும்.
அதற்கு பதிலாக மூட்டை கொண்டு வரும் சனிக்கிழமையோ அல்லது வாரத்தில் எந்த கிழமைகளிலும் வேலை செய்கிறோம் என கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தின்போது தங்களது கோரிக்கை குறித்து ஈரோடு விற்பனைக் குழு செயலாளர் சாவித்திரியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் இது குறித்து தெரிவிக்கும்போது சுமை தூக்கும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளனர்.
இதனையடுத்து ஈரோடு விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி மற்றும் வியாபாரிகள், விவசாயிகள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணி செய்ய மாட்டோம் எனக்கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து ஏலம் நடைபெற்றது. கோரிக்கை குறித்து முடிவு எட்டப்படாததால் ஏலத்திற்குப் பிறகு மூட்டையை தைக்க ஆட்கள் வரவில்லை.
பின்னர் இரவு மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா உள்ளிட்ட போலீசார்கள் பாதுகாப்புடன் விவசாயிகளே தங்களது மூட்டைகளை தைத்து எடைபோட்டனர். பின்னர் நேற்று எடைபோடப்பட்ட மூட்டைகளை விவசாயிகளே ஆட்களை வைத்து லாரிகளில் எடுத்துச் சென்றனர். இது குறித்து விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி, ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
