சென்னை: சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு தனியார் பயணிகள் விமானம் இலங்கைக்கு புறப்பட தயாரானது. அதில் பயணிக்க வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 7 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். அப்போது, அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் அமெரிக்க டாலர், சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு கரன்சிகள் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 7 பேரிடமிருந்தும் ரூ.42.18 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சியை பறிமுதல் செய்தனர்.
பின்னர், அவர்களின் பயணங்களை ரத்து செய்து, 7 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னையிலிருந்து துபாய் செல்லும் ப்ளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில் செல்ல வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு ஆண் பயணியை சந்தேகத்தில் சோதனையிட்டனர். அதில், ரூ.14.45 மதிப்புடைய சவுதி ரியால் பணம் மறைத்து கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. அவற்றை கைப்பற்றினர். பின்னர், அவரது பயணத்தை ரத்து செய்து கைது செய்தனர்.
