×

குழந்தைகள் மீதான குற்ற தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு வாகனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: குழந்தைகள் மீதான குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழக காவல்துறையை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 40 லட்சம் மதிப்பிலான ஒளி, ஒலி கட்டமைப்புடன் கூடிய 2 பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்களை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.குழந்தைகள் மீதான பாலியல் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பல்வேறு சீரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதில் ஒன்றாக, தமிழக காவல்துறை அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ₹40 லட்சம் மதிப்பீட்டிலான இரண்டு ஒளி, ஒலி கட்டமைப்பு, அகன்ற திரையுடன் கூடிய பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தின் நான்குபுறமும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனத்தின் சுற்றுப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை காணவும், அதனைப் பதிவு செய்யவும், தேவைப்படின் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும், பாதுகாப்பு பணியிலும் வாகனத்தை பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுதல் மட்டுமன்றி, சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளுக்கும், அவசர காலங்களில் நடமாடும் கட்டுப்பாட்டு அறையாக செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பணிகளை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில், ஒன்று சென்னை காவல் ஆணையர் கட்டுப்பாட்டிலும், மற்றொன்று சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியின் கட்டுப்பாட்டிலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,MK Stalin , Crime prevention on children Action Awareness Vehicle: Launched by Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...