×

தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை: நாகலாந்தில் கலவரம் வெடித்தது; வன்முறையில் வீரர் பலி

கொஹிமா: தீவிரவாதிகள் ஊடுருவல் பற்றி கிடைத்த தவறான உளவு தகவலின் அடிப்படையில்,  நாகலாந்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை அடித்துக் கொன்றனர். இந்த சம்பவத்தால் நாகலாந்தில் கலவரம் வெடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் என்எஸ்சிஎன் (கே) உள்ளிட்ட நாகா குழுக்கள், அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களிலும், அண்டை நாடான மியான்மரிலும் நாகா இனத்தவர்கள் வசிக்கும் பகுதிகளை இணைத்து ‘நாகாலிம்’ எனும் தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு பல்வேறு நாச வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், என்எஸ்சிஎன்(கே) அமைப்பின் யங் ஆங் பிரிவினர் சிலர் இந்தியா-மியான்மர் எல்லையை ஒட்டிய நாகலாந்து மாநிலத்தின் மோன் பகுதியில் நடமாடி வருவதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது, ஓடிங்-திரு கிராமங்களுக்கு இடைப்பட்ட வனப்பகுதியில், நிலக்கரி சுரங்கத்தில் வேலை முடிந்து கிராம மக்கள் வழக்கம் போல் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனில் தீவிரவாதிகள் வருவதாக எண்ணிய பாதுகாப்பு படையினர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். சிலர் காயங்களுடன் தப்பி கிராமத்திற்கு சென்று விஷயத்தை கூறினர். பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்ததில், வேனில் வந்தவர்கள் தீவிரவாதிகள் அல்ல என தெரியவந்தது. உடனடியாக காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர். இதற்கிடையே, ஆத்திரமடைந்த கிராம மக்கள் பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கி உள்ளனர். அவர்களின் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இதனால், ராணுவ வீரர்கள் தங்களின் பாதுகாப்புக்காக மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், மேலும் 5 கிராம மக்கள் பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர். கிராம மக்கள் தாக்கியதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இறந்துள்ளார். இத்தகவல்களை உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் ஆங்காங்கே ஒன்று கூடி மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் நாகலாந்தில் நேற்று கலவரம் வெடித்தது. மோன் பகுதியில் உள்ள அசாம் ரைபிள் ஆயுதப் படையினர் முகாம் மற்றும் கோன்யாக் யூனியன் அலுவலகங்களை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். அங்கு கற்களால் வீசி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், முகாம் கட்டிடங்களில் தீ வைத்து எரித்தனர். இதனால், அந்த இடமே போர்க்களமாக மாறியது. அப்பகுதியில் துப்பாக்கி சத்தங்களும் கேட்டதாக சில வீடியோக்கள் வெளியாகி உள்ளன. நேற்றைய கலவர சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

இதனால், நாகலாந்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், தொடர்ந்து வதந்திகள் பரவாமல் தடுக்கவும் மோன் மாவட்டத்தில் இன்டர்நெட் சேவை மற்றும் மொபைல் எஸ்எம்ஸ் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஆளும் பாஜ அரசு சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்துள்ளது. அப்பாவி மக்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ராகுல், மம்தா உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* உண்மையை சொல்லுங்கள்: ராகுல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘துப்பாக்கிச்சூடு செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது. ஒன்றிய அரசு உண்மையான பதிலை சொல்ல வேண்டும். சொந்த மண்ணில் பொதுமக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லையெனில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் உண்மையிலேயே என்னதான் செய்து கொண்டிருக்கிறது?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

* நீதிமன்ற விசாரணை ராணுவம் விளக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக ராணுவம் விடுத்துள்ள அறிக்கையில், ‘இந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் குறித்து உயர்மட்ட அளவிலான நீதிமன்ற விசாரணை நடத்தப்படும். சட்டப்படியான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையினரும் பலத்த காயமடைந்து உள்ளனர். ஒருவர் இறந்துள்ளார்,’ என கூறப்பட்டுள்ளது.

* ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் எப்போது?
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில், தனி மாநில கோரிக்கையை முன்வைத்து போராடி வரும் நாகா படையினருக்கும், இந்திய அரசுக்கும் இடையே பல ஆண்டு காலமாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் 1963ம் ஆண்டு முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டம் மூலம் உள்ளூர் போலீசுடன் இணைந்து ஆயுதப்படைகள் ரோந்து நடத்த அனுமதிக்கிறது. மேலும் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரமும் ராணுவத்திடமே இருக்கும். இதனால் அப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடினால்  கைது செய்ய முடியும், இச்சட்டத்தை மீறும் நபருக்கு அவர்கள் எச்சரிக்கை கொடுத்தும் இணங்காவிட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தலாம். சோதனை ஆணை இல்லாமலே எந்த இடத்திலும் சோதனை செய்யலாம். கடந்த 2015ம் ஆண்டு ஒன்றிய அரசு மற்றும் நாகா கிளர்ச்சிக் குழுவின் என்.எஸ்.சி.என்-ஐ.எம் பொதுச் செயலாளர் துங்கலெங் முய்வா ஆகியோருக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அதன் பின்னரும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை. தற்போது, கலவரம் வெடித்துள்ளதைத் தொடர்ந்து, சிறப்பு அதிகார சட்டத்தை நீக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

நாகலாந்து முதல்வர் நெபியு ரியோ கூறுகையில், ‘சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஹார்ன்பில் விழாவை கிராம மக்கள் கொண்டாடி வரும்போது, தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது’ என்றார்.

* அமித்ஷா வேதனை
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிவிட்டர் பதிவில், ‘நாகலாந்தின் துரதிருஷ்டவசமான சம்பவத்தால் வேதனையடைந்து உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணை குழு, இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கும். உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதியை உறுதிப்படுத்த வேண்டும்,’ என கூறியுள்ளார். ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சம்பவம் குறித்து விளக்கி உள்ளார்.


Tags : Nagaland , Army attack on suspected militants kills 13 innocent people: Riots erupt in Nagaland; Violently kills the player
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...