×

ராணுவத்தில் வீர மரணமடைந்த தமிழக வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ராணுவத்தில் பணியாற்றி வீர மரணமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த படைவீரர் கே.ஏகாம்பரம் மனைவி குமாரி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் கருப்பசாமி மனைவி தமயந்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் பழனிகுமார் மனைவி பாண்டியம்மாள் ஆகியோரின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் கூறினார்.

பின்னர், கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.20 லட்சத்திற்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். அப்போது,  தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன், பொதுத்துறை  சிறப்புச் செயலாளர் கலையரசி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், லடாக், காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை (ஜோஷிமத், உத்ரகாண்ட் மாநிலம்) பனிச்சறுக்கு மூலம் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற முதல் தமிழ்நாட்டு ராணுவ வீரரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் குபேர காந்திராஜ் சாதனையை கவுரவித்து முதல்வர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin , Rs 20 lakh each to the heirs of Tamil Nadu soldiers who died in the army: Chief Minister MK Stalin
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...