×

திருச்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி பெண் துணை கலெக்டரின் வீடு, பெட்ரோல் பங்க், பள்ளியில் ரெய்டு: ரூ.10 கோடி சொத்து ஆவணம் பறிமுதல்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு பகுதியை சேர்ந்தவர் பவானி(45). திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தனி துணை கலெக்டராக (வருவாய் நீதிமன்றம்) பணியாற்றி வருகிறார். இவரது முதல் கணவர் சந்திரசேகர், கடந்த  2000த்தில் விபத்தில் பலியான நிலையில் 2வதாக உறவினரான ராதாகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகே அரசு பணியில் சேர்ந்தார். தொழிலதிபரான ராதாகிருஷ்ணன், கடந்த 3 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஹர்ஷவர்தன், பிஇ பட்டதாரியான இவர், வெர்ஷா கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற பெயரில் பங்குதாரருடன் இணைந்து திருவானைக்கோவில் அருகே அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி வருகிறார். லால்குடி அருகே வாளாடியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

மண்ணச்சநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஒரு பங்குதாரராகவும் உள்ளார். 2016ல் இவருக்கு திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் தாய் பவானியுடன் வசித்து வருகிறார். மற்றொரு மகனான  ஸ்ரீவர்சன் சென்னையில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் துணை கலெக்டர் பவானி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின்பேரில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிந்தனர். நேற்று காலை ஸ்ரீரங்கம் நெல்சன் ரோட்டில் உள்ள பவானிக்கு சொந்தமான வீடு, லால்குடி அருகே வாளாடியில் உள்ள பெட்ரோல் பங்க், மண்ணச்சநல்லூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பவானி வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடந்தது.

இதில் ரூ.10 கோடி மதிப்புடைய பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. பெட்ரோல் பங்க்கில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளியிலும் ஏராளமான ஆவணங்கள், பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த பள்ளியில் 38 பேர் பங்குதாரர்களாக உள்ளனர். இதில் ராதாகிருஷ்ணன், ஹர்ஷவர்தன் இருவரும் பல கோடியில் முதலீடு செய்துள்ள தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அரசு அதிகாரியாக பவானி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக வந்த புகாரில் சோதனை நடத்தப்பட்டது என்றும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

* கொடைக்கானலில் பண்ணை வீடு
கடந்த 2011ல் ஸ்ரீரங்கம் கோயிலில் அன்னதான திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தபோது தாசில்தாராக பவானி பணியாற்றினார். முன்னாள் அரசு கொறடாவும், தற்போது அமமுக மாநில செயலாளருமான மனோகரனுக்கு பவானி தங்கை முறை உறவினர் ஆவார். அதிமுக விசுவாசியாக காணப்பட்ட பவானி, துணை கலெக்டராக பணியாற்றி வரும் மன்னார்குடிக்கு தினமும் திருச்சியிலிருந்து சொகுசு காரில் சென்று வருவதாகவும், இவருக்கு 100 டேங்கர் லாரிகள், கொடைக்கானலில் பண்ணை வீடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரது ஸ்ரீரங்கம் நெல்சன் ரோட்டில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ.1.50 கோடி. சொந்த ஊரான விருதுநகரில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய வீடு கட்டி வருகிறார்.

வாளாடி பெட்ரோல் பங்க் தவிர சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் பெட்ரோல் பங்க், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணியில் எஸ்எஸ் டியூப் என்ற பெயரில் கம்பெனி உள்ளது. இவரது ஸ்ரீரங்கம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் மற்றும் 10வங்கி கணக்கு புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் ரொக்கம் ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. வீட்டில் 2 சொகுசு கார் இருந்தது. அதுகுறித்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 2011 முதல் 2016 வரை ஸ்ரீரங்கம் மற்றும் மண்ணச்சநல்லூரில் செட்டில்மென்ட் தாசில்தாராக பணியில் இருந்த பவானி, அதிகார துஷ்பிரயோகம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து பெட்ரோல் பங்க் மற்றும் சொத்துக்கள் வாங்கியது அம்பலமாகியுள்ளது.

Tags : Trichy , Trichy Anti-Corruption Police raid female deputy collector's house, petrol punk, school: Rs 10 crore property document seized
× RELATED வேகத்தடையில் பஸ் பழுதாகி நின்றதால்...