×

தமிழகத்தில் ஜவுளி தொழிலை பாதுகாக்கும் வகையில் பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும்; ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் ஜவுளி தொழிலை பாதுகாக்கவும், வேலை இழப்பை தடுக்கும் வகையில் பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது. இந்தியாவில் நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் 2வது பெரிய தொழிலான ஜவுளித் துறையில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும். 2021-22ம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவு திட்டத்தில் 5% அடிப்படை சுங்க வரி, 5% விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி மற்றும் 10% சமூகநல வரி விதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இறக்குமதி வரி 11% ஆக உயர்ந்ததே பருத்தி விலை ஏற்றத்திற்கான ஒரு முக்கிய காரணமாக கருதுகிறேன். எனவே, ஜவுளி தொழிலை பாதுகாக்கவும், வேலை இழப்பை தடுத்திடவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தலையிட்டு பின்வரும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

1 ஊக வணிகத்தை தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.
2 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்கு பெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும்.
3 உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5% வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin ,Union Minister , The 11 per cent import duty on cotton should be abolished to protect the textile industry in Tamil Nadu; Chief Minister MK Stalin's letter to the Union Minister
× RELATED வெளி மாநிலங்களுடன் ஒப்பிடாமல்...