×

பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை ரத்து செய்க: நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்; நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது என்றும் இந்தியாவில் நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் 2-வது பெரிய தொழிலான ஜவுளித் துறையில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தில் 5% அடிப்படை சுங்க வரி, 5% விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி மற்றும் 10% சமூக நல வரி விதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இறக்குமதி வரி 11% ஆக உயர்ந்த்தே பருத்தி விலை ஏற்றத்திற்கான ஒரு முக்கிய காரணமாக கருவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். எனவே, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கவும், வேலை இழப்பைத் தடுத்திடவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தலையிட்டு பின்வரும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

* ஊகவணிகத்தைத் தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும்
11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.

*  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு
ஏலத்தில் (e-auction) பங்கு பெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும்.

* உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5% வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் அவர்களை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Union Minister of Textiles , Abolish 11% import duty on cotton: Chief Minister MK Stalin's letter to the Union Textiles Minister demanding control of yarn prices
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...