×

சமையலறை அளவுகூட இல்லாத இடத்தில் ஆணையம் செயல்படுவதா?: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய சுப்ரீம் கோர்ட் ஆணை..!!

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையம் செயல்படுவதற்கான மாற்று இடத்தை செவ்வாய்கிழமைக்குள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரும் வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த இந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தை தடை செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது. ஆணையம் வெறும் 200 சதுர அடியில் இயங்கி வருவதற்கு நீதிபதிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

சமையலறை அளவுகூட இல்லாத இடத்தில், ஆணையம் செயல்படுவதா? என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆறுமுகசாமி ஆணையம் செயல்படுவதற்கான போதுமான மாற்று இடத்தை செவ்வாய்கிழமைக்குள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் ஆணைய விசாரணை தொடர்பாக, செய்தி சேகரிக்க செல்லும் அனைத்து செய்தியாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

வாத பிரதிவாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜெலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளனர். நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே இயற்கை விதி என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆணையத்திற்கு தடை கோரும் அப்பல்லோ மருத்துவமனையின் மனு மீதான விசாரணை இந்த மாதம் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,Arumugasami Commission , Arumugasami Commission, Alternative Location, Supreme Court
× RELATED ஆறுமுகசாமி ஆணையத்தில் கூடுதல்...